பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலாவதியான ரத்தம் ஏற்றியதால் பரிதாபமாக 8 நோயாளிகள் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலியான நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு ரத்தம் வழங்கும் துறையில் பைகளில் அச்சிடப்பட்ட தேதி, பேட்ஜ் எண் சேதப்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு செலுத்த கொடுக்கப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனையை சேர்ந்த ஜூனியர் டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை வழங்கும் என்றும், இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இதன்பின்னரே உறவினர்கள் கலைந்து சென்றது.
இதுகுறித்து பீகார் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டியா கூறுகையில், மருத்துவமனையில் இருந்து விரிவான அறிக்கையை கேட்டு உள்ளேன். குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.