தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா, முரசொலி பவள விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா ஆகிய முப்பெரும் விழா தஞ்சை ஒரத்தநாட்டில் இன்று நடைபெற்றது. விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு பிரதமர் மோடி அநீதி இழைக்கிறார். சமூக நீதிக்கு எதிராக பிரதமர் செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்.
தமிழகத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது. இந்த ஆட்சியை மக்கள் யாரும் விரும்பவில்லை. தமிழக மக்களை காப்பாற்ற இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கவர்னரை நாளை சந்திக்க உள்ளோம். உங்களுக்கு உரிய மரியாதை தர நாங்கள் தயார். ஆனால், ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பில் நீங்கள் இருக்கிறீர்கள். அரசுக்கு ஆதரவு எவ்வளவு, எதிர்ப்பு எவ்வளவு என்பது குறித்த கணக்கை நாளை அவரிடம் கொடுக்கப்போகிறோம். இதனை வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்ல உள்ளோம். இந்த விஷயத்தை பெருத்தவரை கடைசியாக அவரிடம் வலியுறுத்த உள்ளோம்.
கவர்னர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், இந்த ஆட்சியை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக அல்ல, தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக இந்த ஆட்சியை அகற்றும் வரை ஓய மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.