இராணுவத்தினருக்கெதிராக பன்னாட்டுச் சமூகம் நடவடிக்கை எடுப்பதை சிறிலங்கா சுதந்திரக் கட்சி அனுமதிக்கப்போவதில்லையென அக்கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான மகிந்தஅமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ‘போரில் புலிகளும் மாண்டனர்; இராணுவத்தினரும் மாண்டனர். அதற்காக பன்னாட்டுச் சமூகம் இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம்.
நாட்டுக்காக அர்ப்பணித்த இராணுவத்தினரைப் பாதுகாக்கும் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோன்று இரண்டு கட்சிகளும் ஆட்சியிலிருக்கும்போது பிளவுபடவும் அனுமதிக்கப்போவதில்லை.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்கடத்தல், கொலைகள் போன்ற நடவடிக்கைகளை இராணுவத்தினர் செய்திருந்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் எமது நாட்டின் இறமைக்குட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.