எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ஜே.அன்பழகன், வேலு, பொன்முடி மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆகிய 10 பேரும் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது:-
அ.தி.மு.க.வைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் முதலில் தங்கள் ஆதரவை திரும்பப் பெருவதாக அறிவித்தனர். அதைத்தொடர்ந்து ஜனாதிபதியை சந்தித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாட்டில் நிலவிவரும் சூழ்நிலை பற்றி விலக்கி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறினார்கள். இதற்கிடையில், மறுபடியும் ஆளுநரை சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி ஆட்சிக்கு எதிரான உறுப்பினர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என்பதை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 89 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இது தவிர பழனிச்சாமிக்கு எதிராக 21 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மொத்தம் 119 எம்.எல்.ஏ.க்கள் தமிழக அரசுக்கு எதிராக உள்ளனர். எனவே பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை.
அதனால் இன்னும் ஒருவார காலத்திற்குள் சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிருபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும். இன்னும் ஒரு வார காலத்திற்குள் சட்டசபையை கூட்ட வேண்டும் என கவர்னரிடம் தெரிவித்துள்ளோம். இந்த காலகெடுவிற்குள் சட்டசபையை கூட்டாவிட்டால் நீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் நாங்கள் தேடி செல்வோம். எனவே உங்களை நாங்கள் சந்தித்து மனு அளிப்பது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என ஆளுநரிடம் நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டோம். என அவர் கூறினார்.