எகிப்தின் பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி ‘பிரமீடு’ எனப்படும் கல்லறையில் அடக்கம் செய்வது வழக்கம். அவ்வாறு பதப்படுத்தி வைக்கப்படும் உடல் ‘மம்மி’ என அழைக்கப்படுகிறது.
இத்தகைய பல ‘மம்மி’கள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது மேலும் புதிய ‘மம்மி’கள் அகழ் வாராய்ச்சி நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளன. தலைநகர் கெய்ரோவில் இருந்து தெற்கு 400கி.மீ தொலைவில் நைல் நதியின் கரையில் லுசார் நகரம் உள்ளது. அதன் அருகே செல்வந்தராக வாழ்ந்த அமெனம்காத் என்பவரின் பிரமீடு (கல்லறை) உள்ளது.
அதற்குள்ளே தான் இந்த ‘மம்மி’கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று பெண் மற்ற இரண்டும் அவரது குழந்தைகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்களில் ஒன்று 50 வயது பெண் என்றும் மற்ற இரண்டும் அவரது 20 மற்றும் 30 வயது மகன்கள் என்றும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய் எலும்புருக்கி நோயினாலும், மகன்கள் வேறு நோயினாலும் இறந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இவை கி.மு.11-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் ‘மம்மி’கள் புதைக்கப்பட்டிருந்த கல்லறையில் இருந்தும் அதற்கு வெளியேயும் பல புராதன பொருட்கள், நகைகள் மற்றும் சிலையும் கைப்பற்றப்பட்டன. இத்தகவலை பழமை சின்னங்கள் துரை அமைச்சர்கள் சாலித் அனானி தெரிவித்தார்.