சென்னையில் இருந்து வங்கி மூலம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கில் பணம் அனுப்பப்படுவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு இதில் தீவிர கவனம் செலுத்தி விசாரணை நடத்தியது. அப்போது வட சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட், ஆங்காங், தைவான் ஆகிய நாடுகளுக்கு கம்பெனிகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் அனுப்பப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
மொத்தம் ரூ.421 கோடிக்கு இவ்வாறு சட்டவிரோதமாக பணம் அனுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் பேங்க் அதிகாரிகள் மற்றும் 19 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
19 நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்குகள் தொடங்கி முறையான வர்த்தகம் எதுவும் செய்யாத நிலையில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த பணம் அனைத்தும் வெளிநாட்டு கரன்சியாக மாற்றப்பட்டு அனுப்பி உள்ளார்கள். இதுபோல் 700 முறை வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் இதர முறைகேடுகள் பற்றி அமலாக்கப் பிரிவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.