வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை போகம்பர சிறைச்சாலைக்குச் சென்று அரசியல் கைதிகளைச் சந்தித்துள்ளனர்.
அச்சிறையில் தடுத்துவைத்துள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளையும் சந்தித்து அவர்களின் சுக நலன்களை விசாரித்தனர்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர்,
‘குற்ற ஒப்புதலுக்கு அமைவாகவே இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. சட்டத்திற்கமைய ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதன்காரணமாவே நாங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி வருகின்றோம். அனைத்து வழக்குகளிலும் ஒப்புதல் வாக்குமூலங்களே சாட்சிகளாகப் பெறப்பட்டுள்ளன.
இவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனைவிற்கு சில நாட்களுக்கு முன்னர் கடிதமொன்றை அனுப்பியுள்ளேன்.
முடிந்தளவு விரைவாக தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கினை விசாரித்து வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு சட்டமா அதிபருக்கும் கடிதமொன்று அனுப்பிவைத்துள்ளேன்.
ஆனாலும், அவை எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எம்மால் ஒன்றும் செய்யமுடியாதுள்ளது.
இதற்கான நடவடிக்கையை அரசாங்கமும், சட்டமா அதிபர் திணைக்களமும், ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுமே எடுக்கவேண்டுமெனவும் மேலும் தெரிவித்தார்.