எவ்விதமான அனுமதிப் பத்திரங்களும் இன்றி, எட்டு பாம்புகளை பிடித்து வைத்திருந்த வைத்தியர் ஒருவருக்கு, மாத்தறை நீதவான் நீதிமன்ற நீதவான், 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
வன விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மாத்தறை , மிரிஜ்ஜவில பகுதியில் வசித்து வந்த அந்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, நபரான வைத்தியர், எட்டு பாம்புகளைச் சிறை பிடித்து, தனது வீட்டில் வைத்துள்ளார் என்றும், அவற்றை வெளி நாட்டவர்களுக்கு காண்பித்து பணம் சம்பாதித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.
வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியின்றி இவ்வாறு பாம்புகளை தன்வசம் வைத்திருந்தது சட்ட விரோதமான செயலென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிருகங்களை பொது மக்களுக்கு காண்பித்து, பணம் பெறுவதற்கு தமது திணைக்களத்தின் விசேட அனுமதி அவசியமென்றும் வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், சந்தேக நபர் தகுந்த அனுமதியின்றி பாம்புகளை வைத்திருந்தமையால், விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு தகுந்த தண்டனைகளை பெற்றுக்கொடுக்குமாறு அந்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடுத்த வேண்டுகோளை அடுத்து அவருக்கு, மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபரான அந்த வைத்தியரும் குற்றத்தை, தான் ஒப்புக்கொள்வதாக நீதவானிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே, சந்தேக நபரான வைத்தியருக்கு, 60,000 ரூபாய் அபராதம் விதித்த நீதவான், சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட, பாம்புகளை வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.