கிளிநொச்சி, கல்மடுநகர் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில், புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், எரிபொருள் தாங்கியொன்றை மீட்டுள்ளதாக, கிளிநொச்சி விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த எரிபொருள் தாங்கி, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சொந்தமானது என்று கருதப்படுகின்றது.
கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, அந்தக் காட்டுப்பகுதியில் சோதனை நடத்தி, மேற்படி எரிபொருள் தாங்கியை மீட்டுள்ளதாக அப்பிரிவு தெரிவித்துள்ளது.
புதைத்து வைக்கப்பட்டிருந்த அந்தத் தாங்கி, தோண்டியெடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த விமானப்படையினர், யுத்தம் நடைபெற்ற காலத்தில், அப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்ததாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட அந்தத் தாங்கியில், 30 ஆயிரம் லீற்றர் எரிபொருளை சேமித்துவைத்துகொள்ள முடியும். யுத்தக்காலத்தில் வடக்குக்கு அனுப்பப்பட்ட எரிபொருட்களை, விடுதலைப் புலிகள், அபகரித்து, இந்த தாங்கியிலேயே சேமித்து வைத்திருந்ததாகவும் அறியமுடிகின்றது.
இதேவேளை, அந்த தாங்கி புதைக்கப்பட்டிருந்த பகுதியில், ஏனைய ஆயுதங்கள் ஏதும் புதைக்கப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் விமானப்படை மேலும் தெரிவித்தது.