சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்காமல் கிழக்கு மாகாண சபை பாரபட்சம் காட்டியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
சுகாதார தொண்டர்கள் நியமனம் கோரி, மட்டக்களப்பு நகரில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 65க்கும் மேற்பட்ட சுகாதார தொண்டர்கள் கிழக்கு மாகாண சபையால் நியமனம் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண சபையால் கடந்த காலங்களில் சிற்றூழியர் நியமனங்கள் பலருக்கும் வழங்கப்பட்டன. இந்நியமனங்களில் இந்த சுகாதார தொண்டர்கள் உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
“அரசியல் சிபாரிசுகளுக்கு ஏற்ப கிழக்கு மாகாண சபையால் கடந்த காலங்களில் சிற்றூழியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
“கடந்த 2000ஆம் ஆண்டு தொடக்கம் இவர்கள் இந்த ஆண்டு வரை சுகாதார தொண்டர்களாக எந்த வித கொடுப்பனவுமின்றி சேவையாற்றி வருகின்றனர்.
“வறுமையிலும் இந்த சுகாதாதரத் தொண்டர் சேவை செய்யும் இவர்களுக்கு கிழக்கு மாகாண சபையும் மத்திய அரசும் நியமனம் வழங்க வேண்டும்.
“இதனை நான் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தவுள்ளேன். இவர்களின் நிலைமையை கிழக்கு மாகாண சபை கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்