மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்தும் தீர்வுகள் கிடைக்காததனால் இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், சுழற்சி முறையில் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்டையில் இன்று காலை 8 மணிமுதல் நாளை (13) காலை 8 மணிவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, பொலனறுவை, மட்டக்களப்பு, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர், வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
இதேவேளை, நாளை (13) காலை 8 மணிமுதல் நாளை மறுதினம் (14) காலை 8 மணி வரை வவுனியா, மாத்தளை, அம்பாறை, பதுளை, மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் 14 ஆம் திகதி காலை 8 மணிமுதல் மறுநாள் (15) காலை 8 மணிவரை அநுராதபுரம், குருணாகலை, கண்டி, இரத்தினபுரி, காலி ஆகிய மாவட்டங்களிலும் 15 ஆம் திகதி காலை 8 மணிமுதல் 16 ஆம் திகதி காலை 8 மணிவரை புத்தளம், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும் வேலைநிறுத்தப்போராட்டம் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தின்போது அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி மேலும் பல தொழிற்சங்கங்களை இணைத்துக்கொண்டு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர், வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.