மன்னார் காக்கையன் குளத்தில் அல் – அறபா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் விழாவில் பிரதம விருந்தினராக, கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “அற்பசொற்ப இலாபங்களுக்காகவும், குறுகிய நலன்களுக்காகவும் அரசியல் வியாபாரிகளின் தந்திரோபாய வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள். சமுதாய உணர்வுடன் சிந்தியுங்கள், செயற்படுங்கள். தேர்தல் நெருங்கும் போது அரசியல் வியாபாரிகள் இந்தப்பிரதேசங்களிலுள்ள தமது ஏஜ்ன்டுகளை பயன்படுத்தி ஒற்றுமையாகச் செயற்படும் மக்களிடையே பிளவுகளை உருவாக்கி வாக்குகளை எப்படியாவது பெற்றுவிடவேண்டுமென்ற உத்தியை கையாளுவார்கள். இப்போது அதை ஆரம்பிக்கதொடங்கியுள்ளார்கள்” என்றார்.
”எங்களைப் பொறுத்தவரையில் இதயசுத்தியோடும் இறைவனுக்குப் பயந்தும் நேர்மையுடனும் நேர்த்தியாகவும் மக்கள் நலனில் ஈடுபடுகின்றோம். அரசின் பூரண ஒத்துழைப்பின்றி, சில அதிகாரிகளின் தடைகளுக்கு மத்தியிலும், இனவாதிகளின் கூச்சலுக்கும், கூப்பாடுகளுக்கும் இடையேயும் வேலைத்திட்டங்களையும், அபிவிருத்திகளையும் முன்னெடுத்து வருகின்றோம். மீள்குடியேற்ற அமைச்சராகவோ, கல்வி அமைச்சராகவோ, பெருந்தேருக்கள் அமைச்சராகவோ நான் இல்லாத போதும் பாதைகளும், பாடசாலைகளும், வீடுகளும் அமைத்து தருகின்றோம். இந்தத் துறைகளைச் சாராத வேறொரு அமைச்சின் பொறுப்பில் இருந்த போதும் நாங்கள் கச்சிதமாகவும், நேர்மையாகவும் இந்தப்பணிகளை மேற்கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
”அகதி முகாம் ஒன்றிலிருந்து சமுதாய நலனுக்காக, ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசியல் பயணம் நாடளாவிய ரீதியில் விரிந்து, வியாபித்து எல்லாத் திசைகளிலும் நோக்கிச் செல்வதை பொறுக்கமாட்டாத அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட அரசியல் சக்திகளும், இனவாதக் கூட்டமும் எம்மைப் பற்றி எத்தனையோ அபாண்டங்களையும், வீண்பழிகளையும் பரப்பி வருகின்றபோதும் எமது பயணத்தை நாங்கள்ஒருபோதும் இடைநிறுத்தப்போவதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பயணத்தில் தூய்மையும், நேர்மையும் இருக்கின்றது. துன்பப்பட்டவர்களின் துயர்களைத் துடைப்பதனாலேயே, எங்களுக்கு வரும் துன்பங்களையும் துணிவுடன் முகங்கொடுத்து வெற்றிபெற முடிகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காணிகளையும், வீடுகளையும் பெற்றுக்கொடுத்ததனால்தான் நீதிமன்ற வழக்குகளுக்கு அன்றாடம் முகங்கொடுக்கின்றோம். மன்னாரில் பாதிக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுக்கு கடல் வளத்தை வழங்கவேண்டும் என குரல் கொடுத்ததனாலேயே நீதிமன்றத்தில் கல்லெறிந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இன்று இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றது. சிரியாவில், ஈராக்கில் பலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் மீது ஏகாதிபத்திய சக்திகள் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கொடூரங்கள் எண்ணற்றவை. மியன்மாரில் அங்கு வாழும் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகம் கண்ணுக்கு முன்னே குத்திக்குதறி கொல்லப்படுகின்றது. முஸ்லிம் நாடுகள் இவற்றை கண்டும் காணாதது போன்று செயற்படுவது வேதனையானது. மனிதத் தன்மையற்ற இந்த கொடூரங்களை எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.
நமது நாட்டிலும் 5வருடங்களுக்கு முன்னே இவ்வாறான ஒரு நிலையை உருவாக்குவதற்கான ஓர் அடித்தளத்தையும், முயற்சியையும் பேரினவாதிகள் மேற்கொண்டனர். எனினும், முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியில் பிரிந்திருந்த போதும் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்து இருந்த காரணத்தினால் சமூக விடயங்களில் பிரதிநிதிகளும், முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்களும் ஒன்றுபட்டு இந்தப்பிரச்சினையை கையாண்டனர். இதன் மூலம் எமக்கு வந்த பிரச்சினையை ஓரளவு தணிக்கமுடிந்தது.
சிறுபான்மை மக்களால் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி, தேர்தல் முறை மாற்றம் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் போன்ற ஆட்சி முறைமைகளின் மாற்றத்தில் சிறுபான்மை மக்களுக்கு எந்த அநீதியும் இழைக்கக்கூடாது. இந்தச் சீர்திருத்தங்களில் சிறுபான்மை சமூகம் பாதிக்கப்படக்கூடாது என்பதை மிகவும் தெளிவாகவும், அழுத்தமாகவும் வலியுறுத்தியுள்ளோம்.