சமஷ்டி முறையானது நாட்டை பிளவுபடுத்தி பிரிவினைவாதத்தை தோற்றுவிக்காது என்பதில் தமக்கு நம்பிக்கையில்லையெனவும் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அரசியல் அதிகார கோரிக்கைக்கும் தாம் அங்கீகாரம் வழங்க முடியாது எனவும் அஸ்கிரிய பீடம் அறிவித்துள்ளது. அத்துடன் வடக்கு மாகாணத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் மலையகம் அடுத்தபடியாக போர்க்கொடி தூக்கும் எனவும் அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் மெதகம தம்மானந்த அநுநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டியிலுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் தமது நிலைப்பாடு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நாம் அண்மையில் வடக்கிற்குப் பயணம்மேற்கொண்டபோது, அரசியல் அதிகாரங்களைப் பெறுவதில் காட்டும் ஆர்வம், மக்களின் அடிப்படைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் காண்பிக்கப்படவில்லையென்பதை அறிந்துகொண்டோம்.
வடமாகாணத்தின் முதலமைச்சர் நான்கு வருடங்கள் கழித்து எங்களை வந்து சந்தித்துள்ளார். காலங் கடந்த சந்திப்பென்றாலும் மகிழ்ச்சியளிக்கின்றது. அவரை நாம் முதலமைச்சராகப் பார்க்காது நீதியரசராகவே பார்க்கின்றோம்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் கடந்த வாரத்தில் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தன. வடக்கில் சில பகுதிகளில் மக்களின் வாழ்வு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. போர் முடிந்த பின்னர் அந்த மக்கள் அனைத்து வகையிலும் சிறப்புடனும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதே மஹாசங்கத்தினரின் எதிர்பார்ப்பு. அந்த வகையில் வடக்கு மக்களின் வாழ்வதார விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்ற வலியுறுத்தலை அரசாங்கத்திற்கு வழங்க உள்ளோம்.
அதேபோன்று அரசாங்கத்தின் நிதி உரிய வகையில் வடக்கு மாகாணத்திற்கு கிடைப்பதில்லை என்று முதலமைச்சர் விக்ணேஷ்வரன் குறிப்பிட்டார். அந்த விடயம் குறித்து அரசாங்கத்திற்கு விஷேடமாக தெரியப்படுத்த உள்ளோம். ஒரே நாட்டில் வாழ்கின்ற மக்கள் அரசின் திட்டங்களில் சரிநிகராக பயன்பெற வேண்டும். அவற்றில் வேறுபாடுகள் ஏற்படும் போது தான் அநாவசியமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே மக்களின் நலன்கள் விடயத்தில் அரசாங்கம் முன்னுரிமையுடன் சிந்திக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
அதே போன்று அரசியல் அதிகார விடயங்களில் எப்போதும் நாட்டில் இதுவரைக்காலமும் காணப்பட்ட ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும். சமஷ்டி முறைமையினால் இலங்கை பிளவுபடாது என்று முதலமைச்சர் விக்ணேஷ்வரன் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே சமஷ்டி முறைமையை நாட்டிற்குள் கொண்டு வந்து மேலும் அதிகாரத்திற்குள் முரண்பட்டு அமைதியின்மையை உருவாக் முயற்சிக்ககூடாது.
ஏனைய மாகாணங்களை போன்று வடக்கு மாகாணமும் அரசாங்கத்துடன் ஒருமித்து பயணிக்க வேண்டும். சமஷ்டி முறைமை நாட்டை பிளவுப்படுத்தி பிரிவினைவாதத்தை தோற்றுவிக்காது என்பதில் நம்பிக்கை வைக்க முடியாது. எனவே உலக நாடுகளின் ஆட்சி முறைமையை இலங்கையுடன் ஒப்பிட்டு கூறுவதும் ஏற்புடையதல்ல. வடக்கிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் மலையகமும் போர் கொடி தூக்கும். எனவே அநாவசியமான பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் காரணமாகி விடகூடாது.
நாட்டின் நிலையான அமைதி மற்றும் அனைத்து மக்களினதும் நல்லிணக்கம் என்பதே முக்கியமான விடயமாகும். பொது மக்களின் அடிப்படை விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்வதில் காட்டப்படும் ஆர்வம் மக்களின் அடிப்படை குறைகளை தீர்ப்பதில் காட்டப்படவில்லை என்பதை வடக்கு விஜயத்தில் எம்மால்உணர கூடியதாக இருந்தது.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய உள்ளிட்ட மஹா சங்கத்தினர் அனைத்து இன மக்களுக்கும் சமமான நிலையிலேயே நோக்குகின்றனர் என தெரிவித்தார்.