பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டாத அனைத்து நிலங்களையும் அரசுடமையாக்கி அதனை பயிச்செய்கைக்காக பிரித்து வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் பழைய நிலைக்குக்கொண்டுவந்து, உணவுற்பத்தியை மேம்படுத்துவதற்கு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ், வர்த்தமான அறிவித்தலை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் அரசாங்கக் காணிகள் அனைத்திலும் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. பயிர் செய்யப்படாத அனைத்து தனியார் காணிகளிலும் கட்டாயம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவேண்டுமென்ற சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தி, நாட்டின் நாளைய தலைமுறைக்கு சுபீட்சமான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
கல்வி, சுகாதாரம், சமூகநலன் பேணல் போன்ற அனைத்துத் துறைகளிலும் நாட்டில் சமமான அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.