தமிழ் மக்களுக்காக சாத்வீக வழியில் போராடி மரணத்தைத் தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவு நாட்களில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்படவிழா நடைபெறவுள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டித்துள்ளது.
இந்நிகழ்வு தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வெளியிடப்பட்டஅறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
தமிழ் மக்களின் உரிமைக்காக தியாகி லெப்.கேணல் திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய நாட்களில் சர்வதே திரைப்பட விழா நடத்தப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
உலகளாவிய ரீதியில் சினிமா ரசிகர்களாலும், இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரவேற்கின்றது.
ஆனால் கடந்த 7 தசாப்தங்களாக ஒடுக்கப்படுகின்ற தேசிய இனம் அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபட பல தியாகங்களைச் செய்து போராடி வருகின்றது.
அதன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக தியாகி லெப். கேணல் திலீபனின் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் விளங்குகின்றது.
1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் நாள் நல்லூரின் பின்வீதியில் தியாகி லெப்.கேணல்திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய தியாகப் பயணம் செப்ரெம்பர் 26 இல் தேசமே எழுச்சிகொள்ள தான் நேசித்த மக்களையும் மண்ணையும் விட்டுப் பிரிந்தது.
அத்தியாகியின் உயிரி பிரிந்த நகரிலும், உண்ணா விரதம் இருந்த நாட்களான செப்ரெம்பர் 15 தொடக்கம் 20 வரையான நாட்களில் திரைப்பட விழா கொண்டாடுவது, எம்மக்களுக்காக தியாகி லெப்.கேணல் திலீபன் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்தி, தமிழ் மக்களின் தேசிய உணர்வை உதாசீனம்செய்து, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்வதாகும்.
எனவே குறித்த நாட்களில் சர்வதேச திரைப்பட விழாவினைக் கொண்டாடுவதையிட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வருத்தமடைவதுடன், இந்நாட்களில் அந்நிகழ்வை தவிர்த்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினரிடம் வேண்டிக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.