பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மிக முக்கிய தீர்மானம் அதிமுகவில் இனி பொதுச் செயலாளர் பதவியே கிடையாது. அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே. இதுகுறித்த ஓர் அரசியல் பார்வை.
என்ன வகையான அதிகாரங்கள் இருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தீர்மானம் 12 கூறுகிறது. 46 பக்கங்கள் கொண்ட தீர்மானம் முழு விபரம்:
கட்சி விதி 5 முதல் 45 வரை பொதுச் செயலாளருக்கு என வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் இனி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிக்கு மாற்றி வழங்கப்படுகிறது.
சட்டப்பிரிவு விதி 5 பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் இனி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றப்படுகிறது. உறுப்பினர்கள் சேர்க்கும் உரிமை இறுதியாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் அதிகாரத்தில் இருக்கும்.
விதி -19 தலைமைக் கழகப் பொதுக்குழு : பிரிவு – 1 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக பொதுக்குழு பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் என இருந்தது நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிளைப்பாளர்கள் அவைத் தலைவர், பொருளாளர், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்கள் என மாற்றப்படுகிறது.
மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தணிக்கைக் குழு, சொத்து பாதுகாப்புக் குழு, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் ஆகியோர்கள் அடங்கிய அமைப்பாகும்.
அதிமுகவின் முழு அதிகாரங்களைக் கொண்ட தலைமை அமைப்பாக பொதுக்குழு அமையும்.
பிரிவு – 4 : பொதுக்குழுவிற்கு 100 பேர்களுக்கு மேற்படாத அளவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கட்சி உறுப்பினர்களிலிருந்து பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்க அதிகாரம் உண்டு.
பிரிவு – 7 : கட்சிப் பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அவசியம் என்று கருதும் பொழுது கூட்டப்படலாம். மேற்படி கூட்டத்திற்கு 15 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும்.
இது தவிர கட்சியின் அனைத்து அணிகளையும் கட்டுப்படுத்தும் அல்லது மாற்றியமைக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு உண்டு.
கட்சியின் வரவு செலவு, அசையும் சொத்துகள் , அசையா சொத்துகள், கடன் வாங்குவது, கொடுப்பது, சொத்துக்கள் வாங்குவது நிர்வாகிப்பது அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
மொத்தத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் கூட்டாக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் 12 தெரிவிக்கிறது.