22-04-2009 அன்று புதன்கிழமை சிறிலங்கா படையினர்; அம்பவலவன்பொக்கணை, வலைஞர்மடம் மக்கள் வாழ்விடங்கள் மீது செறிவான ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 324 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 423 பேர் படுகாயமடைந்தார்கள். வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயம் மீது சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் பங்குத்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் படுகாயமடைந்துள்ளார். தேவாலய வளாகத்தில் மட்டும் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்தார்கள்.
அத்துடன் பிரதேசங்களில் இருந்த மக்களின் நிலையான வீடுகள் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. வலைஞர்மடத்தில் இயங்கிவந்த நட்டாங்கண்டல் மருத்துவமனை மிக மோசமாக சேதமடைந்து.
இதேவேளையில் கடந்த இரு நாட்களில் சிறிலங்கா படையினரின் கொடூரத் தாக்குதலில் 2 ஆயிரம் வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தார்கள். காயமடைந்தவர்களில் 1,700 பேர் உயிராபத்தான நிலையில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்கள்.
இவர்களை ஏற்றிச்செல்ல அனைத்துலக செஞ்சிலுவை சங்கக்குழுவின் ‘கிறீன் ஓசின்’ கப்பல் இன்று முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்தது. ஆனால் கப்பலை நோக்கி சிறிலங்கா படையினர் பகுதியில் இருந்து பீரங்கித் தாக்குதலை நடத்தினர். இதனால் கப்பல் மீண்டும் ஆழ்கடலுக்குச் சென்றது. அதனையடுத்து பல மணிநேர தாமதத்தின் பின்னர் கப்பல் கரையில் இருந்து ஒரு கிலோ மீற்றர்களுக்கு அப்பால் தரித்து நின்றது.
அன்று மாலை 6:30 மணி வரைக்கும் 354 நோயாளர்கள் மட்டும் கப்பலில் ஏற்றப்பட்டனர். 500 நோயாளர்களை ஏற்றுவதற்கே முன்னர் திட்டமிடப்பட்டடிருந்தது. அதேவேளையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் பொறுப்பதிகாரி படையினரின் தாக்குதல் அச்சம் காரணமாக கரைக்கு வரவில்லை. அவர் கப்பலிலேயே நின்றுவிட்டார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் பார்த்தீபன், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கத்தோலிக்க அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார், படகில் கப்பலுக்கு சென்று மக்களின் நிலைமைகள் குறித்து எடுத்து விளக்கினர்.
உணவுக்கப்பல் நாளை வரும் என்று அதிபர் பார்த்தீபனுக்கு கப்பலில் இருந்த அனைத்துலக செஞ்சிலுவை சங்க அதிகாரி தெரிவித்தார்.
அதேவேளையில் படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரும் கப்பலில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
-மீள் பதிவு