விடுதலைப்புலிகளின் இத் தொழிநுட்பத்தையே தற்பொழுது வடபிராந்திய பேருந்து ஊழியர்களும் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் குறைந்த செலவில் அதிக இலாபத்தினைப் பெறமுடிவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனரக வாகனங்களின் எரியூட்டல் தொகுதிக்கு டீசலே முக்கிய எரிபொருளாகத் திகழ்கின்றது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் டீசல் மற்றும் மண்ணெண்யை போன்றவை அத்தியாவசியமற்ற பொருட்கள் எனத் தெரிவித்து, குறித்த இரண்டு எரிபொருட்களையும் தடைசெய்திருந்தது.
இந்நிலையில், இதற்கான மாற்றுவழியாக பெற்றோலுக்கும் டீசலுக்கும் பதிலாக மண்ணெண்ணையைப் பாவிப்பதற்குத் தீர்மானித்தனர்.
இதன்படி, வாகனங்களின் டீசல் இயந்திரப் பகுதியில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்வதன்மூலம் டீசல் இயந்திரத்தை மண்ணெண்ணைக்கு மாற்றலாம் என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதன்காரணமாகவே யுத்த காலத்தில் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையையும் மீறி விடுதலைப்புலிகளால் வாகனங்களைப் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது எனவும்அறியப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய இத் தொழிநுட்பத்துக்கு டீசல் வாகனங்களை மாற்றுவதற்கு வெறும் 3500 ரூபாவே செலவாகுவதாகவும், இத்தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதால் தாம் அதிக இலாபத்தைப் பெறுவதாகவும் தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.