ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.
சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா நடத்திவரும் தாக்குதலுக்கு அந்த அமைப்பின் தலைவர் அப்தல் மாலிக் அல் ஹவுத்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொலைகாட்சியில் பேசிய அவர் கூறியதாவது:-
எங்கள் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தினால், நாங்கள் அந்நாட்டின் எண்ணெய் கிணறுகளை இலக்காக கொண்டு தாக்குவோம். எங்களால் எதையும் செய்யமுடியும். இதற்கு முன்னர் நாங்கள் இவ்வாறு செய்ததில்லை. எங்களிடம் உள்ள கண்டம்விட்டு கண்டம்தாக்கும் ஏவுகணைகள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி மற்றும் சவுதி அரேபியாவின் எந்த இலக்கையும் தாக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த அச்சுறுத்தல்களை நிறைவேற்றும் திறன் ஹவுத்தி அமைப்பினரிடம் உள்ளதா? என்பது தெளிவற்றதாக இருக்கிறது.