ஆனையிறவூடாக யாழ்ப்பாணம் செல்வேன்…
மக்கள் வன்னியை விட்டு யாழ்ப்பாணம் செல்வது பற்றி உங்கள் கருத்து? இது ஒரு ஊடகவியலாளனின் நேர்காணலுக்கான வினா. இதற்கான பதிலாக “எங்கட மக்கள் இங்கே இருக்கும் மருத்துவ நெருக்கடிகளை தவிர்க்கவும் நோயினால் ஏற்படும் மரணங்களையும் சந்திரிக்காவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார தடையினால் ஏற்பட்டுள்ள பசி பட்டினிகளில் இருந்து தம்மை பாதுகாக்கவும் என்று சிங்களத்தின் கைகளில் தாமாக போய் மாட்டுப்படுகின்றனர். ஆனால் எமது தமிழீழ மண் தன்நிறைவுள்ளதாக மாற்றம் காணும் அப்போது இவ்வாறு செல்பவர்களில் பலர் காணாமல் போயிருப்பர். இவ்வாறு தொடர்ந்த அவரது பதிலின் முடிவில் அந்த ஊடகவியலாளன் அடுத்த வினாவை தொடுக்கிறான்.
நீங்கள் யாழ்ப்பாணம் போவீர்களா?
ஆம் போவேன் போகும் போது என் கையில் எம் தேசியக்கொடி இருக்கும் எனது உந்துருளி கிளிநொச்சி தாண்டி உமையாள்புரம் ஊடாக ஆனையிறவு சென்று அங்கிருந்து பளையூடாக என் பிறந்த மண்ணுக்கு செல்வேன். அவர் உறுதியாக கூறிய போது மனசு நிறைந்து கிடந்தது.
அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பள்ளி மாணவர்களில் நானும் ஒருவன் பதிலளித்த அந்த மனிதன் என் வாழ்நாளில் மிக முக்கியமானவர். என் பள்ளிக்கால வாழ்க்கையில் இருந்து அதன் பின்பான வாழ்க்கையில் இருந்து இறுதியாக நான் சந்தித்த 18 ஆம் திகதி வைகாசி 2009 ஆம் நாள் வரை என்னோடு நெருக்கமான உறவு அவர். அவர் என் ஆசான் என்பதையும் தாண்டிய நேசத்துக்குரியவர். பின் நாட்களில் தாயகன் மாஸ்டர் என்று அனைவராலும் அறியப்பட்ட ஆசிரியர்.
எனக்கு சரியாக அந்த ஆண்டை நினைவுபடுத்த முடியவில்லை ஆனால் 1997 அல்லது 1998 என்று நம்புகிறேன் இந்த நேர்காணல் அவரால் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் கூறிய ஆனையிறவினூடான தடையில்லா பயணம் 2000 ஆம் ஆண்டின் இன்றைய நாள் (22.04.2017) எமக்காக எமது விடுதலை இயக்கத்தால் திறக்கப்பட்ட போது அந்த மனிதன் அடைந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் கூற முடியாது.
அவர் கூறினதை போலவே யாழுக்கான அரசியல் பணிக்கு சென்ற போராளிகளுடன் தேசியக்கொடி பறந்த வாகனத்தில் கிளிநொச்சி தாண்டி உமையாள்புரம் தாண்டி ஆனையிறவு தாண்டி யாழ்ப்பாணம் சென்றார். அந்த உப்பு வெளிக் காற்று வந்து அவர் தேகத்தை தழுவிய போது உணர்ந்த உணர்வை அவரால் கூற முடியாது சிலிர்த்து நின்றதை பின்நாட்களில் நான் கண்டு கொண்டேன் அந்த அனுபவத்தை விவரிக்க முடியாதுநின்ற போதும் அந்த வெற்றிக்காக வீரச்சாவடைந்த உறவுகளை நினைத்து வேதனைப்பட்டதையும் நான் அறிவேன். அத்தகைய ஒரு இனமானமுள்ள வீரன் தனது கற்பித்தலை, ஆசிரியத்துவத்தை விட்டு தேசப்பணிக்காக போராளியாகிய போது இந்த உரிமைப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்படும் என்று நினைக்கவே இல்லை.
தன் தங்கை இறுதி நேரத்தில் கரும்புலியாக காற்றோடு கலப்பதை கண்முன்னால் கண்டு தன் மைத்துனர்கள் இருவரை நீலக்கடலடியில் மாவீரங்களாக்கி நிமிர்ந்து நின்றவரை நான் இறுதியாக முல்லைத்தீவில் சிங்களத்திடம் அடிமைகளாக கைகளை உயர்த்தி சென்ற போது கண்டேன். ” அப்பா எங்கடா ? என்றார் கவனமடா என்ன நடந்தாலும் ஏற்றுக் கொள் தேவையல்லாம மாட்டுப்படாத எதுக்கும் உள்ள போனவுடனே இந்தியாப்பக்கம் மாறு இங்க நிக்காத… ஏராளமான அறிவுரைகளை தந்தார். அவருடன் நின்றவர்களுடன் வந்ததாகவும் அவர்களுடனே செல்லப் போவதாகவும் சொன்னார். சேர்ந்தே போகலாம் வாங்கோ என்று அழைத்த போது மறுத்துவிட்டு சென்றவரை இன்னும் எங்கே இருக்கிறார் என்று அறிய முடியாத நிலையில் இருக்கிறேன்.
நல்ல ஆசானாக, அண்ணனாக, வழிகாட்டியாக சிறுவயதில் இருந்து பள்ளி வாழ்க்கையில் என்னை புடம் போட்டவரை பற்றி எழுத ஏராளம் உண்டு ஆனால் நிலமைகள் என்னை தடுக்கின்றன. மனிதம் நிறைந்த அந்த கரிய நெடிய உருவத்தை காண வேண்டும் என்று மனம் ஏக்கம் கொள்கிறது…
ஆனையிறவில் எம் கொடி பறக்கும் என்றதைப் போலவே மீண்டும் எம் கொடி வானில் பறக்கும் அன்று மீண்டும் தமிழன் வீரத்தை பாரே உணரும் என்று கூற என் ஆசான் மீள வேண்டும்…
நினைவோடு கவிமகன்