இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு சிகிச்சையின் போது எச்.ஐ.வி நோயாளியின் இரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இரத்தபுற்று நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சையின் போது மாற்று இரத்தம் செலுத்தப்பட்டது. அதன்பின் சிறுமியின் உடல்நிலை மோசமானதால் அவர் ஆலப்புழா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியின் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் எச்.ஐ.வி. இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு எச்.ஐ.வி. நோயாளியின் இரத்தத்தை செலுத்தியது தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா கேரளா மருத்துவக்கல்வியின் இணை இயக்குனர் டாக்டர். ஸ்ரீகுமாரி தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். விசாரணைக்கு பிறகு வழக்கு குறித்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவேண்டும். மேலும், சிறுமியின் சிகிச்சைக்கு தேவையான தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும் என சைலஜா தெரிவித்தார்.