பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கொடுக்கப்பட்ட ஆறு மாதங்களிலேயே, “பூகோள நீதித்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்” என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெனீவாவில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி, நடந்து வருகின்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று உரையாற்றிய போதுதான், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் கொடுக்கப்பட்டு விட்டதாலும், வாய்மொழி அறிக்கையை 37 ஆவது கூட்டத்தொடரிலேயே சமர்ப்பிக்க, வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாலும், இப்போது நடக்கும் அமர்வுகளில் இலங்கை விவகாரம் முக்கியத்துவம் பெறாது என்ற கணிப்பே காணப்பட்டது.
ஐ.நா நிபுணர்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்று கொடுப்பதற்கான உபகுழுக் கூட்டங்களை நடத்துகின்ற நடவடிக்கைகள் மாத்திரம் இம்முறை ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால், இந்தக் கூட்டத்தொடரை அரசாங்கம் அலட்சியமாகவே கருதியிருந்தது.
ஆட்சிமாற்றத்துக்குப் பிந்திய, இலங்கையின் செயற்பாடுகளைப் பல்வேறு நாடுகள், பாராட்டி வந்த சூழலில், இம்முறை ஜெனீவாவில் அழுத்தங்கள், குற்றச்சாட்டுகள் ஏதும் இருக்காது என்றே அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.
இரண்டு ஆண்டு கால அவகாசம் பெற்று விட்டாயிற்று; ஆறு மாதங்கள் தான் கடந்திருக்கின்றன; இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன என்ற நினைப்பும் கூட அரசாங்கத்துக்கு இருந்தது. இவை எல்லாவற்றுக்கும், ஆப்பு வைக்கும் வகையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் தொடக்கவுரை அமைந்திருக்கிறது.
“பூகோள நீதித்துறை நடவடிக்கைகள் அவசியமாகிறது” என்று அவர் கூறியுள்ளமையின் அர்த்தம் என்ன? எந்தச் சூழலில் அவர் இதை வலியுறுத்தியிருக்கிறார்? இது எந்தளவுக்கு சாத்தியமானது என்பன இத்தருணத்தில் ஆராயப்படுவது பொருத்தம்.
2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரில், போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் நடந்திருக்கின்றன. இவற்றுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்; குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதற்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியது ஐ.நா மனித உரிமை ஆணையாளர்தான்.
2009ஆம் ஆண்டிலேயே, அப்போது ஐ.நா மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளை அம்மையார்தான், இந்தக் கோரிக்கையைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். எனினும், இன்று வரையில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான சூழல் உருவாகவில்லை. ஆனாலும், 2012ஆம் ஆண்டு தொடக்கம், ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, கண்காணிப்புப் பட்டியலுக்குள் கொண்டு வரப்படும் நிலை ஏற்பட்டது.
சர்வதேச விசாரணை பற்றிய நவநீதம்பிள்ளை அம்மையாரின் தொடர்ச்சியான கோரிக்கைகளும், போர்க்கால மீறல் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடும், சர்வதேச சமூகத்துக்கு இருந்த கடப்பாடும், இலங்கையில் காணப்பட்ட அரசியல் சூழலும், ஜெனீவாவின் கவனம் இலங்கை மீது திரும்பக் காரணங்கள் ஆயின.
2012ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டு வரும் தீர்மானங்கள், போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், பொறுப்புக்கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், ஒருபோதும், ஜெனீவா தீர்மானங்களுடன் இணங்கவுமில்லை; அவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுக்கவுமில்லை.
எனவே, ஜெனீவா வாக்குறுதிகளை மஹிந்த அரசாங்கம் நிறைவேற்றியிருக்கும் என்று ஒருபோதும் நம்ப முடியாது.
2015இல் பதவிக்கு வந்த தற்போதைய அரசாங்கமும் கூட, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அதே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறது. ஆனால், சற்று வேறுபட்ட முறையில் அதை அணுகுகிறது.
ஜெனீவாத் தீர்மானங்களுக்கு இணங்குவதாக வாக்குறுதிகளைக் கொடுப்பதுபோல் கொடுத்து, அவற்றை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது, அரசாங்கங்கத்தின் பிரதான நோக்கம் ஆகும். பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்காமல் நழுவுவதை, இருவேறுபட்ட அணுகுமுறைகளில் ஆட்சியாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத்தொடுநர்களின் பங்களிப்புடன், நம்பகமானதும் நடுநிலையானதுமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை, அமைப்பதற்கு அரசாங்கம் இணங்கியிருந்தது.
இது கலப்பு விசாரணை ஒன்றையே குறிப்பிடுகிறது. 2015ஆம் ஆண்டு, இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டபோதே அரசாங்கம் இதை அறிந்தும் இருந்தது. அதே விடயங்களை உள்ளடக்கியதாக, கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் அரசாங்கம் இணங்கியிருந்தது.
ஆனாலும், “கலப்பு விசாரணை நடக்காது; அதற்கு அரசமைப்பில் இடமில்லை; இதை சர்வதேச சமூகத்துக்குக் கூறிவிட்டோம்” என்று அரசாங்கம் இழுத்தடிக்கிறது. அதுபோலவே, ஜெனீவாவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அல்லது மெதுவாக நிறைவேற்றி வருகிறது.
பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம், காணிகளை மீள ஒப்படைத்தல், காணாமல் போனோர் பணியகத்தைச் செயற்படுத்தல், அரசியல் கைதிகளின் மீதான சட்ட நடவடிக்கை உள்ளிட்ட நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை விரைவாகச் செயற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள், அவர்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதன் மூலம், அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இரண்டு ஆண்டு காலஅவகாசத்தின், கால்பகுதியே முடிவடைந்த நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது என்ற கருத்தே அரசாங்கத்திடம் காணப்பட்டது.
“இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் தரப்பட்டிருக்கிறது; தேவைப்பட்டால் மேலதிக காலஅவகாசத்தையும் கோருவோம்” என்று, அண்மையில் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற, திலக் மாரப்பன கூறியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்தது. “இலங்கை தனக்கே உரிய பாணியில் பொறுப்புக்கூறலை நிறைவேற்றும்” என்றும், “அதற்கு அவசரப்பட முடியாது” என்றும் அவர் கூறியிருந்தார்.
“போரில் அகப்பட்ட நாடுகள் பலவற்றில், இலங்கையை விடத் தாமதமாகத்தான் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன” என்ற வாதத்தையும் கூட அவர் முன்வைத்திருந்தார்.
இவையெல்லாம், சர்வதேச சமூகத்துக்கு கடுப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தன.
ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தவரும் தற்போது அரசாங்கத்தில் இருக்கின்ற ஓர் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, குற்றச்சாட்டுகளை முன்வைத்து.
அதற்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தயார் என்று அறிவித்த போதும், அரசாங்கம் அதை அணுகிய விதம் கூட, சர்வதேச சமூகத்துக்கு அதிருப்திகளை ஏற்படுத்தியிருக்கலாம்.
தகுந்த ஆதாரங்கள் இருந்தால், குற்றமிழைத்த படையினர் மீது நடவடிக்கை எடுக்கத் தயார் என்று கூறிவந்த அரசாங்கம், ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராகச் சாட்சியங்களை முன்வைக்கத் தயார் என்று சரத் பொன்சேகா கூறிய போது, அவரை ஒரு கோமாளியாகத்தான் வெளிப்படுத்தியது.
ஜெனரல் ஜயசூரிய எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை என்றும், அவரை அரசாங்கம் பாதுகாக்கும் என்றும், திரும்பத் திரும்ப வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஓர் அமைச்சரிடம், மிகமுக்கியமான செல்வாக்கான ஒருவரிடம் உள்ள ஆதாரங்களைக் கூட, செவிமடுக்கத் தயாரில்லாத நிலையில்தான் அரசாங்கம் இருக்கிறது.
இவ்வாறான நிலையில், போர்க்குற்றங்கள் குறித்து, சாதாரண மக்களின் சாட்சியங்கள் எவ்வாறு எடுபடும், அவர்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும் என்ற நியாயமான கேள்வி பிறக்கிறது.
இதுதான், சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய, நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதமையானது, உலகளாவிய நீதி நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குறிப்பிடக் காரணமாயிற்று.
இதன் அர்த்தம், சர்வதேச விசாரணைதான். அதைச் சற்று மென்மையாக் கூறியிருக்கிறார். பொறுப்புக்கூறலுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத நிலையில், சர்வதேச நடவடிக்கைகள் அவசியமாகிறது என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இது அரசாங்கத்தை மிரள வைத்திருக்கிறது. அதனால்தான், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியான அடுத்த நாளே, காணாமல் போனோர் பணியக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆணையை ஜனாதிபதி வழங்கியிருக்கிறார்.
காணாமல் போனோர் பணியக சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், இழுத்தடிக்கப்பட்டு வந்தது. அதை நடைமுறைப்படுத்தவும் ஜெனீவா அழுத்தம் தேவைப்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
இருந்தாலும், “ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அவசரத்துக்கு எதையும் செய்ய முடியாது, பொறுமையாகவே கடப்பாடுகளை நிறைவேற்றுவோம்” என்று அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. எனினும், சர்வதேச சமூகத்துக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தியளிக்கின்றன என்று கூற முடியாது.
சர்வதேச விசாரணையை மனதில் கொண்டு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள கருத்து, அவரது நிலைப்பாடே தவிர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாடு அல்ல; ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இந்த முடிவை எடுத்தால்தான் அது அரசுக்கு நேரடி அழுத்தங்களைக் கொடுக்கும்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீண்டும் வலியுறுத்தத் தொடங்கியுள்ள சர்வதேச விசாரணை என்ற விவகாரம், இலங்கை அரசுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தாது. என்றாலும், இரண்டு ஆண்டு காலஅவகாசத்தின் முடிவிலும், இதேநிலை தொடருமானால், அத்தகையதொரு முடிவை சர்வதேச சமூகம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாது என்று மட்டும் உறுதியாக்க கூற முடியாது.
ஏனென்றால், மாறிவரும் உலகில் எதுவும் நிகழலாம்; நிகழாமலும் போகலாம்.