ராஜீவ் காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்த சதித்திட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீல் வைக்கப்பட்ட உறையில் தாக்கல் செய்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பேரறிவாளன், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். அதில், ராஜீவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்த சதி பற்றி சிபிஐ சரியாக விசாரிக்கவில்லை என்றும், அது தொடர்பான விசாரணை அறிக்கையை தனக்கு வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியிருந்தார்.
கடந்த மாதம் 17ம் திகதி இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், சிபிஐ.க்கும் உத்தரவிட்டது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இந்த விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, இந்த விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்கக் கூடாது என்று நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட பேரறிவாளனின் வழக்கறிஞர் கோபல் சங்கர் நாராயணன், ‘‘நாங்கள் விசாரணை அறிக்கையை எங்களிடம் தரும்படி கேட்கவில்லை. நீதிமன்றம் அனுமதி அளித்தால், நீதி மன்றத்திலேயே அறிக்கையை படித்து பார்க்க தயாராக இருக்கிறோம்’’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள் ரஞ்சன் கோகய், நவீன் சின்கா ஆகியோர், ‘‘மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை படித்தோம். இது பற்றி அடுத்த செவ்வாய்கிழமை விசாரிக்கப்படும்’’ என கூறி, விசாரணையை 19ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.