பேரம் பேசும் அரசியல் என்பது சோரம் போகும் அரசியலாகி, இணக்க அரசியலும் கூட பெருந்தேசியக் கட்சிகளோடு எல்லாவற்றிலும் இணங்கிச் செல்லும் அரசியலாகிப் போய்க் கொண்டிருக்கின்ற நிலைமை காணப்படுகிறது. மாகாண சபைகளுக்கு ஒரேநாளில் தேர்தல் நடாத்துதல் என்ற கோதாவில், அச்சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அற்ப அதிகாரங்களிலும் கைவைக்கின்ற, அரசமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அரசியல் பரப்பை நிறைத்திருக்கின்றன.
இலங்கையின் அரசமைப்பை முற்றுமுழுதாக மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளில், மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்ற நல்லாட்சி அரசாங்கம், மாகாண சபைகளின் தேர்தல், அதிகாரங்கள், தத்துவங்கள், கலைப்பு போன்ற விடயங்களில் மாற்றங்களை உண்டுபண்ணும் விதத்தில், 20ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதில் மிகவும் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அந்த அடிப்படையில், 20ஆவது திருத்தம் பற்றிய இரு வர்த்தமானி அறிவித்தல்கள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளதுடன், இத்திருத்தத்தை மாகாண சபைகளின் அங்கிகாரத்தைப் பெறும் பொருட்டு, நாட்டிலுள்ள ஒன்பது மாகாண சபைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
அதன்பிரகாரம் ஊவா, தென் மாகாணங்களில் 20ஆவது திருத்தம் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. வட மாகாண சபையில் தோற்கடிக்கப்படும் நிலை காணப்பட்ட வேளையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல்,சப்ரகமுவ, வடமத்திய, மாகாணங்களில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், சில மாகாண சபைகளில் இதை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டால், சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்படுவதையும் காண முடிகின்றது.
20ஆவது திருத்தம் என்பது, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் குறைப்பதாக காணப்படுகின்றது என்றும், இது மக்களின் ஜனநாயக உரிமையில் தாக்கம் செலுத்துகின்றது என்று கூறியும் இந்தத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஆறுக்கும் மேற்பட்ட மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நிலைமைகள் இவ்வாறு சவாலாக மாறியதையடுத்து,20ஆவது திருத்தத்தில், மேலும் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் மந்திராலோசனைகளை நடத்தி வருகின்றது.
அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்துக்கு சட்ட மா அதிபரால், மேலும் பல திருத்தங்களை மேற்கொள்வதற்கான உத்தேசம் குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எது எவ்வாறிருப்பினும்,20ஆவது திருத்தத்தின் மீதான தீர்ப்பை அல்லது வியாக்கியானத்தை நீதிமன்றம் இதுவரை வழங்கவில்லை. எதிர்வரும் 19ஆம் திகதி, அது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிலைமைகள் இவ்வாறிருக்க, சிறுபான்மைத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஆட்சியில் இருக்கின்ற கிழக்கு மாகாண சபையில் இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது, கடுமையான விமர்சனங்களுக்குக் காரணமாகியுள்ளது.
திருத்தப்பட்ட திருத்தமே, கிழக்கில் நிறைவேற்றப்பட்டது என்று நகைப்புக்கிடமான ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபையில், இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக 25 பேரும், எதிராக எட்டுப் பேரும் வாக்களித்திருக்கின்றனர்.
ஆதரவாக வாக்களித்தோரில், முஸ்லிம்களின் தனித்துவ அடையாள அரசியல் கட்சியாக கருதப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் மாகாண சபைகளுக்கு மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விடயமல்ல.
தமிழர்களின் ஆட்சியிலுள்ள வட மாகாண சபை, இதை ஏகமனதாக நிராகரித்திருக்கின்ற ஒரு சூழலில், இருசிறுபான்மையினங்களினதும் ஆட்சியதிகாரத்தில் இருக்கின்ற கிழக்கு மாகாண சபை, ஏன் இதை ஆதரிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.
இருபதை நிராகரிக்க, வடக்கு முதலமைச்சருக்கும் உறுப்பினர்களுக்கும் இருந்த தைரியம், கிழக்கு முதல்வருக்கும் சபை உறுப்பினர்களுக்கும் ஏன் இல்லாமல் போய்விட்டது? என்பது போன்ற அடுக்கடுக்கான மேலும் பல கேள்விகள் மேலெழுகின்றன.
இலங்கையில் மாகாண சபைகள் முறைமை என்பது அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் செல்வாக்கினாலேயே 13ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை – இந்திய ஒப்பந்தமானது வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்டு, கனன்று கொண்டிருந்த இனப்பிரச்சினையின் காரணமாகவே கைச்சாத்திடப்பட்டது.
அப்படிப் பார்த்தால் வடக்கு, கிழக்கு என்றொரு மாகாணத்தை உருவாக்கி, சிறுபான்மையினருக்குக் குறிப்பாகத் தமிழர்களுக்கு ஓர் ஆறுதல் பரிசாக, அதிகாரப் பகிர்வுக்கு ஒப்பான, மாகாண சபை அதிகாரத்தை வழங்குவதே, மாகாண சபை முறைமைகளின் நோக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
எனவே, மாகாண சபைகளின் ஆட்சிக்காலத்தை நீடிக்கின்ற அல்லது அதன் அதிகாரத்தில், கொழும்பின் பலத்தை மேவச் செய்கின்ற எந்தவொரு திருத்தத்துக்கும், சட்ட ஏற்பாட்டுக்கும் நாட்டின் எந்த மாகாண சபை ஆதரவளித்தாலும்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அதை ஆதரிக்கவே முடியாது.
ஏனென்றால், முப்பது வருடங்களாகப் பேசப்பட்டு வருகின்ற அதிகாரப் பகிர்வு என்ற தொனிப்பொருளுக்கு, இது முரணானதாகும். இதுவெல்லாம் தெரிந்தவர்களாகவோ, அல்லது தெரியாதிருந்தும் தெரிந்தது போல் காட்டிக் கொண்டே கிழக்கு மாகாண சபையில் 25 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தமானது,எல்லா மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடாத்துவதற்கான திருத்தம் என்றே பலரும் கூறி வருகின்றனர்.
இதன்மூலம் இதில் மறைந்திருக்கின்ற உள்ளடக்கங்களை மறைத்து, இது முற்றுமுழுதாகவே வரவேற்கக் கூடிய திருத்தம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த விளைகின்றனர். ஆனால், அதற்கு மேலதிகமாக,மாகாண சபைகளின் ஆட்சிக்காலம், அதிகாரம், தத்துவங்களில் தாக்கம் செலுத்துகின்ற பல விடயங்கள் இதில் உள்ளன.
எல்லா மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடாத்துவது என்பது மிகவும் சிறப்பானதும் வரவேற்கத்தக்கதுமே ஆகும். அதில் எந்த மாற்றுக் கருத்துகளும் இருக்க முடியாது.
ஆனால், நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். ஒரேநாளில் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் ஓர் அரசமைப்புத் திருத்தத்தை கொண்டு வந்தே, அதைச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, இத்திருத்தத்தில் மேலும் பல விடயங்களும் உள்ளடங்கியுள்ளதை அவதானிக்க வேண்டும்.
குறிப்பாக, 20ஆவது திருத்தம் தொடர்பான, ஓகஸ்ட் மூன்றாம் திகதிய மற்றும் 23 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல்களின்படி, அனைத்து மாகாணசபைகளும் கலைக்கப்பட்டதாக இருக்க வேண்டிய திகதி, நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் என்றும், அத்திகதி இறுதியாக நிறுவப்பட்ட மாகாணசபையின் பதவிக்கால முடிவுத் திகதிக்குப் பின்னராக இருக்கக் கூடாது என்றும் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
அதேபோன்று, தேர்தல் நடைபெறும் திகதிக்கு முன்னர், முடிவடையும் மாகாண சபையின் ஆட்சிக்காலம், தேர்தல் திகதி வரை நீடிக்கப்பட்டதாக கருதப்படுகின்ற அதேநேரத்தில், குறித்துரைக்கப்பட்ட (தேர்தல்) திகதியில் முடிவடையாதிருக்கின்ற மாகாண சபையின் ஆட்சிக்காலம் அத்திகதியில் முடிவடைதல் வேண்டும் என்றும் 20ஆவது திருத்தத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, ஏதேனும் காரணத்தால் மாகாண சபையொன்று கலைக்கப்படும் பட்சத்தில், அந்தச் சபையின் தத்துவங்கள், குறித்துரைக்கப்பட்ட (தேர்தல்) திகதி வரை, நாடாளுமன்றத்தால் பிரயோகிக்கப்படும் என்றும் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது, மாகாண சபைக்கு பெயரளவிலேனும் இருக்கின்ற அதிகாரங்களை நுட்பமான முறையில் நாடாளுமன்றத்தின் பக்கம் இழுத்தெடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை இது கொண்டுள்ளதாகவும், அதனால் மாநில அரசாங்கத்தின் பலம் மேலும் குறைந்துவிடும் என்றும் கூறப்படுகின்றது.
இதன்படி, முதலாவது தடவையாக ஒரே நாளில் தேர்தலை நடத்த எத்தனிக்கின்ற போது, கிழக்கு மற்றும் வட மாகாணங்கள் உட்பட எட்டு மாகாணங்களின் ஆட்சியை நீடிக்க வேண்டி ஏற்படும்.
கடைசியாக, 2019இல் ஊவா மாகாணத்தின் ஆட்சிக்காலம் நிறைவடைந்தவுடன் ஒரே தினத்தில் தேர்தல் நடாத்தப்படும். அப்படியாயின், ஏனைய எட்டு மாகாணங்களின் ஆட்சிக்காலமும் மக்கள் வழங்கிய ஆணைக்கு மேலதிகமாக, ஆகக் கூடியது இரண்டு வருடங்களும் குறைந்தது ஆறு மாதங்கள் என்ற அடிப்படையிலும் நீடிக்கப்படும்.
அந்த இடைப்பட்ட காலத்தில், நாடாளுமன்றத்தின் அதிகாரமே மாகாண சபைகளில் மறைமுகமாக மேலோங்கி இருக்கும். இதனால் அதிகம் நெருக்குவாரப்படப் போவது சிறுபான்மையினரின் வசமுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களே ஆகும்.
எனவேதான்,இதைக் கருத்தில் கொண்டே வடமாகாண சபை 20ஆவது திருத்தத்தை வாக்கெடுப்புக்கு விடாமலேயே நிராகரித்துள்ளது. ஆனால்,கிழக்கு மாகாண சபை கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு, நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றது.
முஸ்லிம்களின் தனித்துவ அடையாள கட்சியாக கருதப்படுகின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான போக்கைக் கொண்டதாகக் கருதப்படுகின்ற சமகாலத்தில், கிழக்கு முதலமைச்சரும் இப்போது அரசாங்கத்தின் விசுவாசியாக ஆகியிருக்கின்றார்.
எனவே, கிழக்கு மாகாண சபையில் தாங்களே, அதை நிறைவேற்றித் தந்தோம் என்று, கொழும்பிடம் சொல்லி, பெருமைப்பட்டு புள்ளிகளை போட வேண்டும் என்ற ஒரு வேட்கை முதலமைச்சருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் இருந்திருக்கும் என அனுமானிக்க முடிகின்றது.
அந்த அடிப்படையில், 20ஆவது திருத்தம் தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் கிழக்கு மாகாண சபையில், கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தது.
பின்னர் இது 29ஆம் திகதிக்கும், அதன்பின்னர் செப்டெம்பர் ஏழாம் திகதிக்கும் பிற்போடப்பட்டது. கடைசியாக செப்டெம்பர் 11ஆம் திகதி வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்தே இத்திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான முயற்சிகளை முஸ்லிம் காங்கிரஸ் சார்பு முதலமைச்சரும் உறுப்பினர்களும் ஐ.தே.கவை பிரதிநிதித்துவம் செய்யும் ச.கலபதி போன்றோரும் மேற்கொண்டனர்.
கொழும்பில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 20க்கு ஆதரவாக உறுப்பினர்களை வசப்படுத்தும் வேலைகள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐ.ம.சுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
“20ஆவது திருத்தத்தை பின்கதவால் நிறைவேற்றிக் கொள்ள மாகாண முதலமைச்சர் முயற்சி செய்கிறார்” என எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் முன்னாள் முதலைமைச்சர் ச.சந்திரகாந்தன் உள்ளடங்கலாக, எதிர்க்கட்சியினர் பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.
கிழக்கு மாகாண சபையில் 20 தோற்றுவிடுமோ எனப் பயந்த முதலமைச்சரும் தவிசாளரும் அரசாங்கத்தின் மேல்மட்டத்தின் ஆசிர்வாதத்தோடு, எப்படியாவது இதை நிறைவேற்றுவதற்கு கடும் முயற்சிகளை எடுத்தனர்.
முன்னதாகச் சில உறுப்பினர்களை நடுநிலை வகிக்கச் செய்து விட்டும், பிறகு “கிழக்கில் சூறாவளி வீசப்போகின்றது” என்று கூறிச் சிலரை வெளியேற்றிவிட்டு, நிறைவேற்றிக் கொள்ளவும் பல சூட்சுமமான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதும், ஏழாம் திகதி வரை அது பலிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய எதிர்க்கட்சிகளும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தன.
அதன்பிறகு, 11ஆம் திகதி 20ஆவது திருத்தம் சபைக்கு கொண்டுவரப்பட்ட போது, த.தே.கூட்டமைப்பு முற்றுமுழுதாகத் தமது நிலைப்பாட்டை மாற்றி, 20 இற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. நான்கைந்து தினங்களுக்குள் அக்கட்சியின் நிலைப்பாடு தலைகீழாக மாறியது கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
த.தே.கூட்டமைப்பினரின் ஆதரவைப் பெறுவதற்காக கிட்டத்தட்ட ஒவ்வொரு உறுப்பினர்களும் தனித்தனியாக அணுகப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஆளுநர் தலைமையில் அம்பாறையில் ஆதரவு தேடும் கூட்டமும் இடம்பெற்றுள்ளது.
ஐ.தே.க தரப்பிலிருந்து அன்பான வேண்டுகோள்களும் த.தே.கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தப் பின்னணியிலேயே தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு த.தே.கூ ஆதரவளித்துள்ளது. ஆயினும் அக்கட்சியின் ஓர் உறுப்பினர், தனது நிலைப்பாட்டில் நிலையாக இருந்தது மட்டுமன்றி, வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு ஒரு விநோத சம்பவம் இடம்பெற்றது. அதாவது 20ஆவது திருத்தத்துக்கு பலமான எதிர்ப்பு காணப்பட்டமையால் அதை அப்படியே சமர்ப்பிக்க முடியாத நிலை கிழக்கில் இருந்தது.
எனவேதான், வேறு பல புதிய திருத்தங்களையும் உள்ளடக்கிய திருத்திய 20ஆவது திருத்தத்துக்கே தாம் வாக்களிக்கக் கோருவதாக முதலமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார். அதை நம்பிச் சிலரும், அதை நம்பாமல் மனச்சாட்சிக்கு விரோதமாகச் சிலரும் வாக்களித்திருக்கின்றனர்.
உண்மையில், இப்போது மாகாண சபைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது 20ஆவது திருத்தத்துக்கான வரைபாகும். அதில், வேறு சில சீரமைப்புகளைச் செய்வதற்காக சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்துள்ளார். அந்த ஆவணத்தைக் காட்டியே கிழக்கு மாகாண சபையில் ஆதரவு கோரப்பட்டுள்ளது.
உண்மையில், அவ்வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதியே வழங்கப்படவுள்ள நிலையில், அதற்கான பரிந்துரைப் பத்திரத்தை, வர்த்தமானி போல ஒரு சட்ட வலுவுள்ள ஆவணமாகக் கருத முடியாது. அத்துடன் திருத்தப்பட்ட 20ஆவது திருத்தம் சபைக்கு அனுப்பப்படவும் இல்லை. எனவே, இவ்வாறான ஓர் ஆவணத்தைக் காட்டி, ஆதரவு கோரியது, சட்டத்துக்கு முரணானது என்று எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சர்ச்சை போதாது என்று, இப்போது இன்னுமொரு சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. அதாவது, வடக்கு,கிழக்கை மீண்டும் இணைப்பது உள்ளிட்ட மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தமது கட்சி ஆதரவளித்ததாக சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இது முஸ்லிம் அரசியலில், சூடான விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. இதற்கெதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நடவடிக்கை எடுக்கப் போவதாக தேசிய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதிகாரங்கள் வேண்டுமெனக் கோரிநிற்கின்ற மாகாணங்களுள் ஒன்றான வடக்கு மாகாண சபை, 20ஆவது திருத்தத்தை நிராகரித்துள்ளதுடன்,வேறு திருத்தங்களுடன் அது, மீண்டும் கொண்டு வரப்பட்டால் பரிசீலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இச்சூழ்நிலையில், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்துவிட்டு,இன்னும் திருத்தப்படாத 20ஆவது திருத்தத்துக்கே ஆதரவளித்ததாகக் கூறப்படுவதை எண்ணி, அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. 20ஆவது திருத்தத்தை, கிழக்கு ஏற்றுக்கொண்டதால் அது முற்றாக நிறைவேற்றப்பட்டு விட்டது என்று அர்த்தமில்லை. அது இன்னும் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கின்றது.
எப்படியிருந்தாலும்,அதிகாரக் குறைப்புக்கு வழிகோலும், மக்களின் விருப்பின்றி, மாகாண சபைகளின் காலத்தை நீடிக்கும், நாடாளுமன்றத்தின் பலத்தை அதிகரிக்கும் 20இற்கு வாக்களித்திருக்கின்றனர் நமது மக்கள் பிரதிநிதிகள்.
முன்னதாக 18ஆவது திருத்துக்கு மத்தியில் வாக்களித்து, ‘திவிநெகும’வுக்கு மாநிலத்தில் வாக்களித்ததன் மூலம் மேற்கொண்ட வரலாற்றுத் தவறு போல இன்னுமொரு தவறு மீண்டும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது என்பது, சிறுபான்மைச் சமூகங்களுக்கு பெரும் கைச்சேதமாகும்.