திண்டுக்கல்லில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி ஆட்சி, சட்டத்தை மதிக்காத ஆட்சி. சட்டத்தை மதிக்கும் அரசு ஊழியர்களை மதிக்கிறேன், பாராட்டுகிறேன். முறையாக நோட்டீஸ் கொடுத்து போராட்டம் நடத்துகிறார்கள்.
போராட்டம் நடத்துபவர்களை முதல்-அமைச்சரோ, துறை அமைச்சர்களோ அல்லது தலைமை செயலாளரோ அழைத்து பேசி சுமுக முடிவு எடுத்து இருக்க வேண்டும். அதை விடுத்து மிரட்டல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.
எத்தனை கோடிகள் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்கலாம் என்பதில் தான் இந்த அரசு தீவிரமாக உள்ளது. மக்களை பற்றியோ, போராட்டம் நடத்தும் ஜாக்டோ-ஜியோவினரை பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், “கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து இருந்தால் அவர், ‘நீட்’ தேர்வை ஆதரித்து அறிக்கை விட்டு இருப்பார் என தமிழிசை சவுந்தரராஜன் பேசி உள்ளாரே?” என நிருபர்கள் கேட்டதற்கு, “தரம் தாழ்ந்து பேசுபவர்களுக்கு பதில் அளித்து என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.