முன்னாள் முதல்வர் பேரறிஞரின் 109-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தங்கசாலையில் அரசு சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
தமிழர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி தந்தவர் அண்ணா. நமது மாநிலம் தமிழ்நாடு என அழைக்கப்படுவதற்கு காரணமானவர் அண்ணா. அண்ணா பிறந்தநாளை கொண்டாட அ.தி.மு.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது.
ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற ஒரு சிலர் திட்டமிட்டு வருகின்றனர். அ.தி.மு.கவையும் ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்று முயற்சித்த தினகரன் குடும்பத்தினருக்கு அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டன. தினகரன் பிடித்து வைத்திருப்பவர்களை வெளியே விட்டால், எங்களிடம் ஓடோடி வந்துவிடுவார்கள். தமிழக அரசை கவிழ்ப்பதற்காக தி.மு.க.வுடன் சேர்ந்து தினகரன் நாடகம் ஆடுகிறார். துரோகம் செய்தவர்களை எல்லாம் ஜெயலலிதாவின் ஆன்மா தண்டித்துக் கொண்டிருக்கிறது, அந்த வரிசையில் தினகரன் தப்ப முடியாது.
கடும் வறட்சியிலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறோம். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கடுமையாக போராடியது.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மக்களுக்காக என்ன செய்தது? தி.மு.க. ஆட்சியில் அவர்களது குடும்ப சண்டையை தீர்க்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. பதவிக்காகவும், ஆட்சிக்காகவும் தி.மு.க. யாருடனும் கைகோர்க்கும். மத்திய பா.ஜ.க. அமைச்சரவையில் ஐந்து ஆண்டு காலம் இடம் பிடித்திருந்த தி.மு.க. இப்போது பா.ஜ.க.வை தீண்டத்தகாத கட்சி என கூறுவதா?
ஸ்டாலினை நம்பி கருணாநிதி கட்சியை ஒப்படைக்காத போது, மக்கள் எப்படி ஆட்சியை ஒப்படைப்பார்கள்? நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர துடிக்கிறது தி.மு.க. ஆனால், மக்களின் தேவைக்காகவும், மாநிலத்தின் தேவைக்காகவும் மட்டுமே அதிமுக கூட்டணி வைக்கும். அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்போம். இவ்வாறு அவர் பேசினார்.