போராட்ட வரலாற்றில் அளப்பரிய சாதனைகளின் வரலாறு படைத்த சமர்களில் ”மட்டுஅம்பாறை ” அதாவது கிழக்கு மாகாணப் போராளிகளின் தியாகத்தை எளிதில் அளவிட முடியாது.
இதற்கு தான் தான் காரணம் என மார்பு தட்டும் ”கருணா”என்கின்ற துரோகி ஒன்றை மறந்து பேசுகின்றார். “கருணாவிற்காக” ஒரு போராளியும் களமாடவில்லை. ” தமிழீழம்” எனும் ஒரு சிந்தனையில் மாத்திரம் தான் போராடினார்கள். இதுதான் கிழக்கில் உள்ள போராளிகளின் கோட்பாடு.
”தலைவர், தலைவர்” என்று நிமிடத்திற்கு நிமிடம் உச்சரித்து தலைவரின் சிந்தனையை போராளிகள் தமது வேத வாக்காக உருவாக்கி தலைவரின் நேர்த்தியான பயணத்தில் உருவானவர்கள்தான் ”ஜெயந்தன் படையணிப் போராளிகள்”. கருணாவிற்காக எந்தவொரு போராளியும் ஆயுதம் ஏந்தவில்லை. கருணாவின் தவறான செயற்பாடுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் கருணாவால் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளும் உண்டு என்பதனை இங்கே நாம் சுட்டிக்காட்டிட வேண்டும்.
“விடுதலை போராட்டம் “ எங்கே ஆரம்பிக்கப்படுகின்றதோ அங்கே சொல்லில் அடங்கிடா” தியாகங்களும்” சொற்களால் வடிமைக்கப்படும் “துரோகங்களும்” மாற்றிட முடியா எடுகொள்கைகளாக காணப்படும். இதனை நாம் வரலாற்றை உற்றுநோக்கும் போது அறிந்திட முடியும். அவ்வாறே தான் ”கருணா” என்ற வஞ்சகமும் அந்த வஞ்சகத்தின் கீழ் சொற்களால் வடித்திட முடியா தியாகங்கள் கொண்ட போராளிகளும் வாழ்ந்து மடிந்தார்கள் என்பதனை ஈழ தேசத்தில் உணர்வுமிக்க தமிழர்கள் உணர்வார்கள்.
சிறு சிறு கபட நாடகங்களில் ஈடுபட்ட கருணாவின் செயற்பாட்டின் உண்மை முகம் தெரிய வரும்போதுதான் 2002 ஆண்டு விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதி கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போதுதான் கருணாவின் துரோகம் தெளிவடைந்தது. 2001 ஆண்டில் ”கருணா செய்த பெரும் துரோகம் வீட்டுக்கொரு பிள்ளை என்று எட்டு வயது தொடக்கம் 12 வயது வரையிலான 575 சிறு பிள்ளைகளை தலைவருக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தார். இவர்கள் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் யாரையும் பார்க்க முடியாது, யாரும் இவர்களை பார்க்கவும் இயலாது. இவைகள் தலைவருக்கு தெரியாது என்பதே உண்மை.
இங்கே அறிவு கூடிய பலரும் எப்படி தலைவருக்கு தெரியாமல் இவை நடக்கும் என்று கேள்விகள் கேட்க கூடும். மனச்சாட்சி உள்ள மனிதர்களாக ஒரே ஒரு கேள்வியை உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். உங்களின் வீட்டில் இருக்கும் அனைவரதும் அனைத்து செயற்பாட்டுகளையும் உங்களால் துல்லியமாக கூறிட முடியுமா? இதே போலத்தான் போராட்ட அமைப்பும். இங்கே இரத்த தொடர்பில்லாத உறவுகள் ஒன்றிணைந்து நம்பிக்கை என்னும் அமைப்பின் புனிதத்தில் இணைந்து செயற்படுகின்றனர். நம்பிக்கைகளை அதிதீவிரமாக வளர்த்துவிட்டவர்களை சந்தேகங்கள் கொண்டு யாருமே பார்ப்பதில்லை. அவ்வாறே கருணா என்ற ஒரு துரோகியின் துரோகமும் இறுதிவரை கவனிக்கப்படாமல் இருந்தது. அதாவது ஒரு தாயே தனது குழந்தைகளை தவறான பாதையில் செல்ல அனுமதிக்க மாட்டாள் என்ற தந்தையின் நம்பிக்கை முழுவதுமாக உடைக்கப்பட்டது என்று இங்கே கூறிட விரும்புகின்றேன்.
2003 கருணாவின் மெய்ப்பாதுகாவலர் ”அகிலன்” அவர்களை போராட்டத்தில் இருந்து அகற்றிவிட்டான் அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதைப்போன்று மட்டு விசேட படையணியின் அப்போதைய தளபதியாக இருந்தவர் ”மதன்” இவர் எவ்வாறான சூழலில் அகற்றப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது. ”தளபதி செல்லக்கவி” இவர் மதன் அண்ணாபோல் என்ன வானார் என்பது இன்றுவரை புரியவில்லை. இப்படி கருணாவிற்கு எதிராகவும் தலைவருக்கு துணையாகவும் இருந்த தளபதிகளும் போராளிகளும் கருணாவால் கொல்லப்பட்டதையும் ஒதுக்கப்பட்டதையும் யாராலும் மறக்க முடியாது.
ஒரு போராளியாக கருணா படையணியில் நானும் இருந்தேன் என்பவனாக என்னால் ஒன்றினை உங்களுக்கு கூற முடியும். எமக்கான போராட்ட பேச்சுகளும் உரைகளும் கருணாவால் நிகழ்த்தப்படும் போது எமக்கு அவரால் சொல்லப்பட்ட விடயம் இன்றும் எமது காதுகளில் ஒலிக்கின்றது.அந்த வசனத்தை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன் ”எங்களிடம் இருந்து அண்ணா,தலைவர் பெரிய ஆளணியையும் சண்டைக்குரிய படைப்பலத்தையும் எதிர்பார்க்கின்றார். நீங்கள் அவரின் எதிர்பார்ப்பிற்கு அமைவாக நீங்கள் ஒவ்வொருவரும் பத்து பேருக்கு சமமாக போரில் விளங்க வேண்டும்” என்பதேயாகும். அதற்கு அண்ணன் சொன்னது போல்” கடுமையான பயிற்சி இலகுவான சண்டை” இவ்வாறு தலைவரின் பெயரினை உச்சரிக்க கூட்டில் அடைக்கப்பட்ட காளையை திறந்தது போல் கயவனை பந்தாட தேகங்கள் எல்லாம் புல்லரிக்கும் எப்போது சண்டை வரும் என்று காத்திருப்பார்கள் போராளிகள். இவ்வாறே போராளிகள் கருணாவால் வளர்க்கப்பட்டார்கள்.
ஆனாலும் ”தலைவரை பிரிந்து கருணா தனியாக செல்லும் போது கருணா ஒரு போராளிக்கும் உயிர் பிச்சை கொடுக்கவில்லை” தன்னை விட்டு விலகினால் போராளிகளின் உறவுக்கு ஆபத்து அதைப்போல் அவர்களின் உயிருக்கும் ஆபத்து என்ற நிலையில் தான் இறுதியில் பல போராளிகள் பயணக்கைதிகள் ஆக்கப்பட்டார்கள். இதில் ஒத்துவராத போராளிகளை நாயை சுடுவது போல் கருணா கொன்றதனையும் யாராழும் மறக்க முடியாது.
”விடுதலைப் புலிகள் கடல் வழியாக வந்து தங்களிடம் சேருங்கள்” என கூறும்வரை அங்கு நின்ற பிள்ளைகளுக்கு என்ன நடக்கின்றது என்பது தெரியாமலே இருந்தது. மேல்மட்டத்தில் ஏற்பட்ட இந்த பாரிய சிக்கலால் கீழ்மட்டத்தில் இருந்த போராளிகளுக்கு உண்மை நிலவரம் சரியாக புரியாமல் தத்தளித்த போராளிகளின் எண்ணிக்கையை என்னால் கணக்கில் எடுக்க முடியவில்லை.இதன் உண்மைத்தன்மையை கிழக்கில் இருந்த எந்த தளபதியும் மறுக்க முடியாது.ஏனெனில் அவர்கள் கருணாவினால் பணயக் கைதியாக வைக்கப்பட்டு இருந்தார்கள் . அப்போது நிகழ்த்த ஒரு நிகழ்வை இங்கே சுட்டிகாட்டிட விரும்புகின்றேன்.அப்போது வாகரையில் கருணாவுடன் இருந்தவர் ”லெப் கேணல் பாரதிராசா,மாற்றும் லீமா” இவர் மட்டு தளபதியாக இருந்தார். அவர் கருணாவிடம் கேட்டார் என்ன நடக்கின்றது கடல்புலிகள் வந்து சரணடையும்படி கூறுகிறார்கள் அப்படி இல்லாவிட்டால் தாக்குதல் தொடுப்போம் என கூறுகிறார்கள் என்று சொன்னதும் அவர்கள் அடித்தால் நீங்களும் அடியுங்கள் என கட்டளை இடப்பட்டது ஒன்றும் புரியவில்லை என தளபதி லீமா (மட் ) கூறினார்
மட்டு அம்பாறை பிரதேசத்தில் நின்ற போராளிகளுக்கும் எதுவும் புரியவில்லை அதற்கு நேரமும் போதவில்லை கருணாவிடம் கதைத்து முடிப்பதற்கு முன் மட்டு அம்பாறை பிரதேசத்தில் நின்ற போராளிகளும் கருணாவுடம் சேர்ந்து விட்டார்கள் என எண்ணிய போராளிகள் தாக்குதலை தொடுத்தனர். ஒன்றும் புரியாத தலைவரின் பேரையே தாரக மந்திரமாக கொண்ட போரளிகள் மீது குண்டுகள் பாய்ந்தன. இதன் விளைவு என்னவெனில் ”முதலாவது துப்பாக்கி சூடு தளபதி லீமாவை” பதம் பார்த்தது 50 கலிபர் சன்னம் அவரின் வையிற்றை பிளந்து செல்ல திகைத்து நின்றார்கள் போராளிகள். கருணாவை விட தலைவரை நேசித்த ஒரு சிறந்த தளபதி லீமா அதனை அவர் கடைசிவரை நிரூபித்திருந்தார்….
தளபதி லீமாண்ணாவின் சிறப்பம்சம் என்னெவெனில் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா இவரின் வீர வணக்க நிகழ்வில் பேசும்போது ”நான் இங்கு லீமா இவர் மட் லீமா என்று கூறியது மட்டு தளபதிகளும் மட்டு போராளிகளும் எப்போதும் தலைவரையும் அவரின் கொள்கையையும் பின்பற்றியவர்கள் என்பதே உண்மை” என்று உரைத்தார். இது ஒரு வரலாறு மிக்க சொல்லாக உணர்வுள்ள தமிழர்களால் நோக்கப்பட வேண்டும். பிரதேசவாதத்தை விதைத்த கருணாவை, மட்டு அம்பாறை போராளிகளும் தளபதிகளும் பின்பற்றவில்லை என்பதனை அறுதியிட்டு கூறும் இந்த சொல்லாடல் பிரதேசவாதம் விதைக்கும் அனைத்து சுயநலவாதிகளுக்கும் சாவுமணியாகவே அடிக்கும்.உலக நீதி கோட்பாட்டில் இறந்தவர்களின் கடைசி வார்த்தைகள் உண்மையென்றே நம்பப்படுகின்றது. அந்தவகையில் மாற்று சிந்தனைகொண்ட கருணா நலன்விரும்பிகள் கூட பால்ராஜ் அண்ணாவின் இறுதி உரையை மதிக்கவேண்டும். இந்த உரையே பால்ராஜ் அண்ணாவால் நிகழ்த்தப்பட்ட இறுதி உரையாக அமைந்தது.
ஆனால் எட்டப்பன் கருணாவை எந்த நேரமும் கடுகளவும் தலைவராக ஏற்கவில்லை தனது சுயலாபங்களுக்கு அனைத்து மட்டு அம்பறை தமிழனையும் இழிவுபடுத்திக்கொண்டு இருக்கின்றார்,
உறவுகளே பிரதேசவாதம் கூறும் ஒவ்வொருவரும் புரிந்திடவேண்டும் மட் அம்பாறை போராளிகள் தளபதிகள் என்றும் துரோகிகள் அல்ல கருணா ஒருவனே எட்டப்பன் என்பதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் என்றால் தலைவரை தாய்தந்தையாய் பார்த்து வளர்ந்த போராளிகள் அனைவரும் தலைவரின் சிந்தனையில் ”தனித் தமிழீழம்” பெறுவதற்கே போராடினார்கள் கருணாவுக்காக அல்ல தமிழனின் தாய் தந்தை என்று அண்ணா என்று வளர்த்த போராளியின் உண்மைப்பதிவு இது.
”போராட்ட வடிவங்கள் மாறலாம், போராட்டம் மாறிட போவதில்லை’
– தலைவரின் சிந்தனைத்துளி