20 ஆவது திருத்தச்சட்ட வரைவை அவசர அவசரமாக நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில், இதற்கு எதிராக 13 கட்சிகள், அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 20 ஆவது திருத்தச் சட்டவரைவு குறித்த தமது வியாக்கியானத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் சபாநாயகரால் வெளியிடப்படும்.
இதனிடையே, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர், அதுகுறித்த மக்களின் கருத்தை அறியும், பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் அமைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தநிலையில், 20 ஆவது திருத்தச்சட்ட வரைவில் மேலும் திருத்தங்களைச் செய்து உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும், அல்லது இந்த வரைவைக் கைவிட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த மாத இறுதியுடன் காலாவதியாகும், கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வரும் ஒக்ரோபர் மாதம் 2ஆம் நாள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.