கடந்த 2000-வது ஆண்டில் நடந்த குடிமைப் பணி தேர்வில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர் ரூபா மவுட்கில். 43-ம் இடம் பிடித்த இவர் கர்நாடக காவல் துறையில் பிதார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரானார். துணிச்சல் மிக்கவரான இவர் கனிமவள கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார்.
நேர்மையான அதிகாரியாக பணியாற்றியதால் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஒரு காலகட்டத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். அப்போது, ஒரு கலவர வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதியை கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக சிறைத் துறை டிஐஜியாக பொறுப்பேற்றார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில், சசிகலாவுக்கு சிறையில் சிறப்புச் சலுகை காட்டப்படுவதாகவும் இதற்காக, சசிகலா தரப்பினர் சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் உள்துறைக்கு அறிக்கை அனுப்பியதுடன் ஊடகங்களுக்கும் பேட்டி அளித்தார்.
இதையடுத்து, சிறை முறைகேடுகள் குறித்து பேட்டி அளிக்கக் கூடாது என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து பேட்டி கொடுத்தார். இந்நிலையில், பெங்களூரு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள கர்நாடக ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் ரூபாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 2016-லும் இவருக்கு குடியரசுத் தலைவரின் காவல் துறை பதக்கம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.