வடக்கு மாகாணத்தை இராணுவப் பிடிக்குள் வைத்திருந்து சர்வாதிகார ஆட்சி நடத்திய பசில் ராஜபக்ஷ மற்றும் ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யவுள்ளனர்.
எதிர்வரும் 21, 22, 23ஆம் நாட்களில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்யவுள்ள இவர்கள், தமது ஆட்சிக்காலத்தில் தமக்கு ஆதரவாகவும், நெருக்கமாகவும் பணியாற்றியவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்ட சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளராக பசில் ராஜபக்ஷ உள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணி, அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் என்பவற்றை இலக்கு வைத்து காய்கள் நகர்த்தும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், வட மாகாணத்தில் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கான அமைப்பாளர்களையும், உறுப்பினர்களையும்தெரிவு செய்வதற்கே இக்குழு யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்கின்றது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது ஆலோசகராகவும் அமைச்சராகவும் இருந்த பசில் ராஜபக்சவே, வடக்கின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக செயற்பட்டார். வடக்கின் வசந்தம் என்ற பெயரில், எல்லாத் திட்டங்களையும் கையாண்டார். இதில் பெருமளவு முறைகேடுகளும், மோசடிகளும் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்தக் காலகட்டத்தில் வடக்கு மாகாண ஆளுனராக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, பசில் ராஜபக்சவுடன் இணைந்து, வடக்கு மக்களையும், அரச நிர்வாகத்தையும் இராணுவ ஆட்சிப் பிடிக்குள் வைத்திருந்தார்.
இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.