தமது கிராமத்தின் மத்தியில் காணப்படும் மயானத்தை அகற்றுமாறு கோரி 68 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும்நிலையில் அம்மக்களை இன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின்போது குறித்த மக்களின் உணர்வுகளைத் தான் மதிப்பதாகத் தெரிவித்த முதலமைச்சர், குறித்த மயானம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தான் இதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் குறித்த பிரச்சனை தொடர்பாக தான் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி மூன்று வாரங்களுக்குள் தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்திருக்கும் மைதானங்களை அகற்றக்கோரி, சமூக நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இப்போராட்டம் 68 நாட்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
68 நாட்களாகத் தாம் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் வடமாகாண முதலமைச்சர் தம்மை நேரில் சந்தித்து பிரச்சனையைக் கேட்டறியவில்லையென மக்கள் கவலை வெளியிட்டதையடுத்தே முதலமைச்சருக்கான இன்றைய பயணம் அமைந்துள்ளது. அத்துடன், மக்களால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போராட்டத்துக்கு காரணமான மைதானத்தையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.