எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, தன்னால் தமிழ்மொழியில் உரையாற்ற முடியாமையை இட்டு, மன்னிக்குமாறும், தன்னுடைய கட்சியின் எண்ணத்தை சிங்கள மொழியில் எடுத்துரைப்பதாகவும் தெரிவித்தார்.
“நாளைய உலகை நமக்கென படைப்போம்” எனும் தொனிப்பொருளில், மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு, முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தலைமையில், கொட்டகலை சித்திவிநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு மனம் வருந்திகொண்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இந்த கட்சியின் எதிர்காலம் மட்டுமன்றி, இந்த நாட்டின் எதிர்காலமும், இங்கிருக்கின்ற இளைஞர்களின் கைகளிலேயே இருக்கின்றது.
“எங்களுடைய கட்சி தொடர்பில், ஓர் எண்ணம் விதைக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணம் எங்களிடம் கேட்டு விதைக்கப்பட்டது அல்ல. எங்களுக்கு எதிரானவர்களிடம் கேட்டே, அவ்வெண்ணம் விதைக்கப்பட்டுள்ளது.
“என்னை இந்த மாநாட்டுக்கு அழைத்தமையின் ஊடாக, பல்வேறான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்று உங்களுடைய தலைவர் இராதாகிருஷ்ணன் கூறினார்.
“இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? எங்கள் தொடர்பில் மிகவிசாலமான குற்றச்சாட்டுகள், பரப்பிவிடப்பட்டுள்ளன.
“எங்களுடைய கட்சி தொடர்பில், சரியான சிந்தனையை விதைக்குமாறு நான் வலியுறுத்துகின்றேன். அதற்காக, நானும் எங்களுடைய கட்சியினரும் முயற்சிகளை மேற்கொள்கின்றோம்” என்றும் அவர் கூறினார்.