இவ்வருட நவராத்திரி விரதம் ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்பவை முறையே 20.09.2017 புதன் கிழமை மற்றும் 21.09.2017 வியாழக்கிழமை என இரு வேறு தினங்களை குறிப்பிட்டுள்ளது.
இதனால் இந்து மக்கள் மத்தியில் நவராத்திரி ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக குழப்பநிலை உருவாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக திணைக்களம் உரிய தரப்பினர்களது ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு பின்வரும் விவரங்களை மக்களுக்கு அறிவிக்கின்றது.
நவராத்திரி விரதம் ஆரம்பிப்பதை நிர்ணயிக்கும் பிரமாணங்களை ஆராயும் போது சாந்திரமாத ஆஸ்விஜ சுத்தபிரதமையன்று நவராத்திரி விரதம் ஆரம்பிக்க வேண்டும். இதன் பிரகாரம் அமாவாசை சேராத பிரதமையில் நவராத்திரி விரதம் ஆரம்பிக்கப்படவேண்டும். அமாவாசை சேர்ந்த பிரதமையில் கும்பஸ்தாபனம் செய்தல் விலக்கழிக்கப்படவேண்டும் என்பதுடன் கும்பஸ்தாபனம் காலையில் செய்தல் வேண்டும் என நவராத்திரி பூஜா பத்ததையில் ( சுப்பிரமணிய சாஸ்திரிகள்) குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 20.09.2017 புதன்கிழமையன்று அமாவாசையானது திருக்கணித பங்சாங்கப்படி மு.ப.10.59 வரையும் வாக்கிய பஞ்சாங்கப்படி மு.ப.11.23 வரையும் உள்ளதால் அன்றைய தினம் அமாவாசை சேர்ந்த பிரதமையில் நவராத்திரி விரதத்தை ஆரம்பிக்க முடியாது.
மேலும், 21.09.2017 வியாழக்கிழமை திருக்கணித பஞ்சாங்கப்படி மு.ப 10.35 வரையும் வாக்கிய பஞ்சாங்கப்படி மு.ப 11.02 வரையும் பிரதமை திதியில் அதாவது ஆஸ்விஜசுத்தப் பிரதமை உள்ளதால் 21.09.2017 வியாழக்கிழமையே கும்பஸ்தாபனம் செய்து நவராத்திரி விரதத்தை ஆரம்பிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.