ஒவ்வொருநாளும் மரணங்கள் சம்பவித்தன, குண்டுவெடிக்குமோ என்ற அச்சம் தெற்கில் இருந்தது. அவ்வாறான நிலைமையொன்று இனியும் ஏற்படக்கூடாது. அத்துடன், இனவாதத்துக்கு ஜே.வி.வி. ஒருபோதும் இடமளிக்காது என்று ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இளைஞர்களே! இனவாதிகளாக ஆகவேண்டாம். இன ஒருமைப்பாடு பற்றி பேசுங்கள், அதனை, புதிய அரசமைப்பின் ஊடாகவே உருவாக்கமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நாளைய உலகை நமக்கென படைப்போம்” எனும் தொனிப்பொருளில், மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு, முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷணன் தலைமையில், கொட்டகலை சித்திவிநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அந்த மாநாட்டில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“அரசமைப்பில், தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படவேண்டும். தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். இவைத்தொடர்பில் பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்” என்றார்.
“தெற்கில் இருக்கும் தோல்வியடைந்தவர்களினால், வடக்கிலும். வடக்கில் இருக்கும் ஒரு குழுவினரால் தெற்கிலும் இனவாதம் போஷிக்கப்படுகின்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“புதிய அரசமைப்பில் என்ன இருக்கின்றது என்று, வடக்கில் உள்ள ஒரு குழு, ஆர்ப்பரிக்கக்கூடும். புதிய அரசமைப்பின் ஊடாக, வடக்குக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுவிட்டதென, தெற்கில் உள்ளவர்கள் பிரசாரங்களை முன்னெடுக்ககூடும். இவற்றையெல்லாம் முறியடிக்கும் வகையிலேயே, புதிய அரசமைப்பு உருவாக்கப்படவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாடு, முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளில் மிகவும் முக்கியமான மூன்று பிரச்சினைகள் உள்ளன. நாடு, நாடு என்றவகையில் எவ்வாறு முன்னோக்கி செல்கின்றது என்பது, அந்நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மையிலேயே இருக்கின்றது. நாடு பொருளாதார ரீதியில், பின்னடைவை சந்தித்திருந்தால், வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை. பாடசாலைகளில் வசதிகள் இல்லை. இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பில்லை. நாட்டில் சட்டமில்லை. குற்றங்கள் அதிகரிக்கும், தற்கொலை அதிகரிக்கும், மக்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரிக்கும், சமாதானம் இருக்காது” என்றார்.
“ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில், நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பமுடியாது. பொருளாதார ரீதியில் நாடு, பின்னோக்கி சென்றுள்ளதை போலவே, அதனால், ஆகக்கூடுதலாக பெருந்தோட்ட தொழிலாளர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“1971 போராட்டத்தில், எங்களுடைய போராட்டத்தில் 10 ஆயிரம் பேரை கொன்றனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானோரை, சிறைச்சாலைகளில் அடைத்தனர். அந்த சிறைச்சாலையில் இருந்தவர்கள், சிற்சில கீதங்களை இயற்றினர். நாங்கள், வெளிப்படையாக அரசியலுக்கு பிரவேசித்ததன் பின்னர், ‘விடுதலை கீதம்’ என்ற பெயரில் அதனை வெளியிட்டோம். அதில், ஒரு கீதத்தில், தேயிலை உற்பத்திகாக, வியர்வை, இரத்தம் சிந்தி, நீங்கள் படுகின்ற நிலைமையை விவரித்துள்ளது” என்றும் அவர் எடுத்துரைத்தார்.
“யாரும் பிறப்பார்கள், யாரும் இறப்பார்கள், எனினும், வாழ்வதற்கான உரிமை இருக்கவேண்டும். வாழவேண்டாமாயின், வாழ்வதற்கு, பொருளாதாரம் வேண்டும், கல்விவேண்டும்”
“எங்களுடைய நாட்டில் 10,052 பாடசாலைகள் இருக்கின்றன. அந்த பாடசாலைகளில், 5,031 பாடசாலைகளில் 200 மாணவர்களுக்கு குறைவானவர்களே இருக்கின்றனர்”
“2,000 பாடசாலைகளில், ஆசிரியர்கள் ஒன்பதுக்கும் குறைவானவர்களே இருக்கின்றனர். ஒரேயொரு ஆசிரியர் இருக்கும் பாடசாலை 137 இருக்கின்றன. இரண்டு ஆசிரியர்களை மட்டுமே கொண்ட பாடசாலை, 522 இருக்கின்றன. அவற்றுக்கும் மாணவர்களே இருக்கின்றனர்”
“அவர்கள், சிங்கள மொழியில் கற்கின்றனரா, தமிழ்மொழியில் கற்கின்றனரா என்பது பிரச்சினையில்லை. பிள்ளைகள் கற்பதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும்” என்றார்.
இரத்தினபுரி மாவட்டத்தில், தமிழ்மொழியில், உயர்தர விஞ்ஞான-கணித பாடசாலை ஒன்றுக்கூட இல்லை. நுவரெலியாவில் இரண்டு இருக்கின்றன. “பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்காவிடின் என்ற வாழ்க்கை, வாழ்வதற்கு நல்ல தொழில் இருக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு, நாளாந்த சம்பளம் 520 ரூபாய், அதில் எப்படி வாழ்வது” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
தேயிலையை உற்பத்தி செய்து, பொதி செய்து, அனுப்பும் வரையிலும், தொழிலாளர்களாகிய நீங்கள் கஷ்டப்படுகின்றீர்கள் என்றால், தேயிலை தோட்டத்திலேயே காலே வைக்காத, முதலாளி எதற்கு? ஆகையால், தேயிலை தோட்டங்களை நிர்வகிக்கும் உரிமையை, தொழிலாளர்களுக்கே வழங்கவேண்டும் என்ற பொறிமுறையை உருவாக்கவேண்டும்.