20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுமாயின், மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படகூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், டிசெம்பர் 9ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்று தேர்தல்கள் திணைக்கள தகவல் தெரிவிக்கின்றது.
அப்படியாயின், கிழக்கு, வட-மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலே அன்றையதினம் நடத்தப்படும் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.
அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம், மீண்டும் திருத்தப்பட்டு, அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில், அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானமும் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அத்திருத்தம் நிறைவேற்றப்படவில்லையாயின், எதிர்வரும் 26ஆம் திகதி சப்ரகமுவ மாகாண சபையும், 30ஆம் திகதி கிழக்கு மாகாண சபையும், ஒக்டோபர் முதலாம் திகதி வடமத்திய மாகாணசபையும் கலைக்கப்படும் என்றும் தேர்தல்கள் திணைக்கள தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், டிசெம்பர் முதலாம் திகதியும், மூன்றாம் திகதியும் விடுமுறை தினங்களாகும். அப்படியாயின், டிசெம்பர் 2ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது.
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை, டிசெம்பர் 16ஆம் திகதியன்று நடைபெறும் என்பதனால், அன்றையதினமும் தேர்தலை நடத்தமுடியாது.
அப்படியாயின், டிசெம்பர் 9ஆம் திகதியே, மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலும் நடத்தப்படக்கூடும் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.