ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காகவும், நாளை திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் பேரணியில் பங்கேற்பதற்காகவும் மறுமலர்ச்சி தி.மு.க.வின் தலைவர் வைகோ ஜெனீவா சென்றுள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ,நா. சபையில் மனித உரிமைக் கவுன்சிலின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் நாள் முதல் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் பிரச்சினையும் விவாதிக்கப்படுகிறது.
இதில் பங்கேற்பதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 17 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, துபாய் வழியாக ஜெனிவா விமான நிலையத்திற்கு பிற்பகல் 2.30 மணிக்குப் போய்ச் சேர்ந்தார்.
ஈழத் தமிழர்கள் அமைப்புகளின் சார்பில் திருமதி சுஜானி ஜீவானந்தம், போஸ்கோ, சஞ்சயன், காண்டீபன். பிரகலாதன், கர்ஜன், ந.பிரபாகரன், அ.பிரபாகரன், கஜன், பாஸ்கரன், ரவிக்குமார், தனுசிகன், ஜீவா மற்றும் பல தோழர்கள் வரவேற்றனர்.
வைகோ இதில் பங்கேற்பதற்கு அழைப்புக் கொடுத்து ஏற்பாடு செய்த அமைப்புகளான பாரதி பிரான்ஸ் தமிழர்கள் கலை மன்றம், தமிழ் உலகம், தென்றல், பிரான்ஸ் தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர் அமைப்பு, பக்கத்தைத் திருப்புவீர் அமைப்பு, சுவிஸ் ஈழத் தமிழர் பேரவை, சுவிட்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரான்ஸ் அனைத்துலக மனித உரிமைச் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வைகோ அவர்கள் 2001 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற ஈழத்தமிழர் பேரணியில் பங்கேற்றார். அதன் பின்னர் கடந்த 16 ஆண்டுகளாக ஜெனிவாவில் ஈழத்தமிழர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பி விசாவுக்கு விண்ணப்பித்தபோதும், இலங்கை அரசின் நிர்பந்த்தத்தால் வைகோவுக்கு விசா வழங்கப்படவே இல்லை.
விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கி உள்ள பின்னணியில் வைகோவுக்கு விசா கொடுக்கப்பட்டு இருப்பது உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்துள்ளது.
செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று ஜெனிவாவில் பகல் 2 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்டமான ஈழத்தமிழர் பேரணியில் வைகோ பங்கேற்கிறார். மனித உரிமைக் கவுன்சில் அமர்வு 29ஆம் தேதி முடிந்த பின்னர், அக்டோபர் 1 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வைகோ சென்னை திரும்புகிறார்.