செஞ்சிலுவை சங்கத்தை மதிக்காத இலங்கை இராணுவம் சிதைந்துபோன தமிழ் உயிர்கள்
இன்றைய நாளில் 23-04-2009 அன்று வியாழக்கிழமை காலை 6:00 மணிக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து அவசர பிரிவு நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்காக அன்று வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘கிறீன் ஓசன்’ கப்பலை சிறிலங்கா கடற்படைப் படகுகள் சுற்றிவளைத்து கரைக்குச் செல்லவிடாது தடுத்ததால் நோயாளர்களை ஏற்றும் பணி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதுடன், இந்த இழுபறியில் நோயாளர்களில் 10 பேர் உயிரிழந்தார்கள்.
சிறிலங்கா கடற்படையின் டோறா மற்றும் கூகர் படகுகள் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலை நோக்கியும், நோயாளர்களை ஏற்றிவருவதற்குத் தயாராகவிருந்த மீன்பிடிப்படகுகளை நோக்கியும் பீரங்கித்தாக்குதலை நடத்தியது. இந்த திடீர்த்தாக்குதலால் செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் கப்பல் அச்சத்தால் ஆழ்கடலுக்கு சென்றது.
அப்போது செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் கப்பலை நெருங்கிய சிறிலங்கா கடற்படையினர் தாம் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகவும், கப்பலை கரைக்குக் கொண்டுசெல்ல வேண்டாம் என்றும் எச்சரித்தனர். மீறிப்போனால் கப்பலுடன் தாமும் வருவோம் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து நிலைமைகளை சுமூகமாக்கும் நோக்கத்துடன் செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் மேல்மட்டத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கப்பலில் பயணிப்பதற்காக நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கரையில் காத்து நின்றனர். இவர்களில் சிலர் செஞ்சிலுவைச் சங்க கப்பலில் ஏற்றப்படுவதற்காக மீன்பிடிப் படகுகளிலும் ஏற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அன்று முறுகல் நிலை தொடர்ந்து கொண்டிருந்தமையால் பிற்பகல் 3:00 மணிக்கு கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ”அண்ணாத்துரை” நோயாளரை ஏற்றிச் செல்வதற்காக வந்த கப்பலை கரைக்கு ஒரு கிலோமீற்றர் தொலைவிற்கு வரும்படியும் கடற்படைக்கு அதில் இருந்து 3 கிலோமீற்றருக்கு தள்ளி நிற்கவேண்டும் எனவும் தகவல் தெரிவித்தார்.
அதன்பின் செஞ்சிலுவைக் சங்க கப்பல் கரைக்கு வந்து 526 நோயாளர்களை மட்டுமே ஏற்றிக்கொண்டு மாலை 6:00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டது.
இதேவேளையில் காலையிலேயே செஞ்சிலுவை சங்க கப்பலில் ஏற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட பல நூற்றுக்கணக்கான நோயாளர்களில் கப்பலுக்கு ஏற்றப்பட்ட நோயாளிகள் தவிர்ந்த மற்ற நோயாளிகளில் சூரியனின் உஷ்ணம் தாங்கமுடியாமல் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில்
1200 மேற்பட்ட நோயாளிகள் அவசர நிலையில் காத்திருந்தார்கள். இவற்றையெல்லாம் சிங்கள அரசதரப்போ இராணுவமோ கவனத்தில் கொள்ளவில்லை என்ற வேதனை நிகழ்ந்த நாள் இன்றாகும்.
-மீள் பதிவு