முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால், அரசுடமையாக்கப்பட்ட மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத்தொகுதியை, உரிமையாளரிடமே கையளிக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, அந்த வீட்டை உரிமையாளரிடமே கையளிக்க, நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில், சிரேஷ்ட சட்டத்தரணி அனுப்பிவைத்துள்ள, கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகம் சிவராஜா, சிவராஜா சரோஜினி ஆகியோருக்கு சொந்தமான, கொழும்பு- 6 வெள்ளவத்தை சப்பல் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி வீட்டுத்தொகுதியில், மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத்தொகுதி, 2009ஆம் ஆண்டு அபகரிக்கப்பட்டது.
பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால ஒழுங்கின் 7(1ம்) விதியின் கீழே மூன்று வீடுகள் அடங்கிய அந்த வீட்டுத்தொகுதி அரசுடமையாக்கப்பட்டது.
தொடர்மாடிக் கட்டடத்தில், மருத்துவ நிலையம் ஒன்றை நடாத்துவதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உரிமையாளர்களால் வாடகைக்கு கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டின் கீழே, விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், அவை அரச உடமையாக்கப்பட்டன.
வீட்டு, உரிமையாளர்களிடமிருந்து சட்டரீதியற்ற முறையில், அந்த வீட்டுத் தொகுதியை அரச உடமையாக்கியமைக்கு எதிராக, பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதியின் செயளாளர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, சட்டமா அதிபர் உட்பட நால்வரை பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால், உயர்நீதிமன்றத்தில், 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர்களான பீ.பி. அலுவிகார, அனில் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஜூன் மாதம் 27ஆம் திகதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மனுதாரர்களுக்கு உரித்தான, கொழும்பு-6 சப்பல் ஒழுங்கையில் அமைந்துள்ள, மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத்தொகுதியை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், அரச உடமையாக்கப்பட்டமை சட்டரீதியற்றது என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ததுடன் மேலும், அச் செயல்பாடு மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத்தொகுதியை, 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், மனுதாரர்களிடம் பிரதிவாதிகள் ஒப்படைப்பதுடன் மேலும், ஐந்து இலட்சம் ரூபாய், நட்டஈடாக மனுதாரர்களுக்கு வழங்குமாறும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தி செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி அல்லது அதற்கு முன்னைய திகதியில், தொடர் மாடிக்கட்டத்தில் உள்ள மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத்தொகுதியை, மனுதாரர்களான குடியிருப்பின் உரிமையாளர்களுக்கு கையளிக்குமாறே அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்நீதிமன்ற தீர்ப்பின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியையும், அந்தக் கடிதத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது.