ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:35க்கு, ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் பயணமாகியுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச் சபை அமர்வு, நியூயோர்க் நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், நாளை 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அன்று பிற்பகல் அமர்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா பொதுச் சபை அமர்வில் உரையாற்றும் மூன்றாவது பொதுச் சபை அமர்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“மக்களை கேந்திரப் படுத்தும் நிலையை உலகில், அனைவருக்கும் மதிப்பளிக்கக்கூடிய, வாழ்க்கை மற்றும் சமாதானத்துக்கான முயற்சி” எனும் தொனிப்பொருளில் இம்முறை நடைபெறும் அந்த மாநாட்டில், இலங்கையில் அரசியல் சமரசம், நல்லிணக்கம் மற்றும் சமாதானம் தொடர்பிலும், 2017ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தி, அதுதொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், பசுமை அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய உரையில் பிரஸ்தாபிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது