தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியை புனரமைக்கும் பணி யாழ். மாநகரசபையிடம் இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும், தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள காணி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குரியது. இது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடவேண்டுமெனவும், ஆலய நிர்வாகத்தினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள் எனத் தான் நம்புவதாகவும், இதற்கு சட்டரீதியான அனுமதி பெறப்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.
இது குறித்து வடமாகாண முதலமைச்சர் தெரிவிக்கையில்,
திலீபனின் நினைவு தூபி அமைந்துள்ள காணி மாநகரசபையால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட காணி. அன்று எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அப்பகுதியில் அமைத்திருந்தோம். ஆனால் தற்போது காணி உரிமையாளர்களின் எதிர்ப்பு இல்லை அதை புனரமைப்பு செய்யலாம். அவர்களின் அனுமதி இன்றி நிரந்தர கட்டடம் அமைக்க முடியாது.
இதை பிரச்சனைபடுத்தாமல் கோவில் நிர்வாகத்தினருடன் பேசி எழுத்து மூலம் அனுமதி எடுத்த பின்னர் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிக்கையில்,
நான் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் இத்தூபியை புனரமைக்க 2 இலட்சம் ஒதுக்கியிருந்தேன். வேலை நடக்கவில்லை. பெரியளவில் இதனைச் செய்யாமல் உடைந்திருப்பதைப் புனரமைப்புச் செய்தாலே போதும் எனத் தெரிவித்தார்.
வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்தெரிவிக்கையில்,
1988ஆம் ஆண்டு இத்தூபியை அங்குரார்ப்பணம் செய்தோம்.
இத்தூபியை அமைப்பதற்கு நல்லூர் ஆலய நிர்வாகம் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காது என்பதில் உறுதியாக உள்ளோம். நான் அதற்குரிய எழுத்துமூல அனுமதியைப் பெற்றுத் தருகிறேன் எனத் தெரிவித்தார்.