நான்காம் கட்ட ஈழப்போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த பின்னர், முதற் தடவையாக மே 27, 2009ல் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா பெற்றுக்கொண்ட இராஜதந்திர வெற்றி தொடர்பாக சன்ஜ டீ சில்வா ஜயதிலக எழுதிய “Mission Impossible: Geneva” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.
மே 19, 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், சிறிலங்கா அரசாங்கத்தால் வெற்றி கொள்ளப்பட்டதானது சிறிலங்காவைப் பொறுத்தளவிலும் பிராந்திய மற்றும் அனைத்துலக சமூகத்தைப் பொறுத்தளவிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க இராணுவ வெற்றியாகவே தற்போதும் நோக்கப்படுகின்றது. ஆனால் இந்த வெற்றியானது ஜெனிவாவில் மேற்குலக சக்திகள் மீது பதிவுசெய்யப்பட்ட ஒரு இராஜதந்திர வெற்றியாக இன்னமும் அடையாளங் காணப்படவில்லை.
சிறிலங்கா ஜெனிவாவில் இராஜதந்திர வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு அப்போதைய சிறிலங்காவிற்கான ஐ.நா தூதுவர் தயான் ஜயதிலக மற்றும் கொழும்பு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற கோட்பாட்டு மாற்றங்கள் போன்றன காரணமாக இருந்தன.
சன்ஜ டீ சில்வா ஜயதிலகவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள நூலானது, இவருடைய கணவர் தயான் ஜயதிலக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவிற்கு ஆதரவான தீர்மானம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு எத்தகைய நகர்வுகளை முன்னெடுத்தார் என்பதை வெளிப்படுத்துகிறது.
குறிப்பாக சிறிலங்காவில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்துமாறும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா பொறுப்புக்கூற வேண்டும் எனவும் மேற்குலக நாடுகளால் சிறிலங்கா மீது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கான முன்னெடுக்கப்பட்ட அதேவேளையில் இத்தீர்மானத்தை சிறிலங்காவிற்குச் சாதகமான தீர்மானமாக மாற்றுவதற்கு தயான் ஜயத்திலக எத்தகைய நடவடிக்கைகளைக் கைக்கொண்டிருந்தார் என்பது ‘“Mission Impossible: Geneva” எனும் நூலின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.Mission Geneva – PAPERBACK
மேற்குலக நாடுகள், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் போன்றவற்றுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், சிறிலங்காவிற்குச் சார்பான தீர்மானம் ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியது. அதாவது சிறிலங்காவானது பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொண்டுள்ளதாகவும் போருக்குப் பின்னான நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சமூகத்தின் உதவியை நாடி நிற்பதாகவும் சுட்டிக்காட்டி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் சிறிலங்காவிற்கு ஆதரவான தீர்மானத்தை எதிர்த்த போதிலும் 29 நாடுகள் இதற்கு ஆதரவாகவும் 12 நாடுகள் இதற்கு எதிராகவும் ஆறு நாடுகள் வாக்குகளை அளிக்காத நிலையிலும் சிறிலங்காவிற்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியது.
இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தயான் ஜயதிலகவின் மனவுறுதி, வலிமை மற்றும் ஆக்கத்திறன் போன்றவையே காரணமாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஜயதிலக இடதுசாரி அரசியல் பின்னணியைக் கொண்டிருந்த போதிலும் சிறிலங்காவிற்குச் சார்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு காரணமாக இருந்ததன் மூலம் உலக வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
இவ்வாறானதொரு இடதுசாரி அரசியல் பின்னணியைக் கொண்டிருந்த ஜயதிலக தனது இராஜதந்திர எண்ணங்களை வெற்றிகரமாக அமுல்படுத்தியிருந்தார். இவரால் அமுல்படுத்தப்பட்ட மூலோபாயங்களின் மூலம் சிறிய நாடுகள் கூட உலகின் சக்தி வாய்ந்த நாடுகளை எதிர்த்து ஐ.நா பேரவையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்குகளை அளித்தன என்கின்ற விடயத்தை ‘சமச்சீரற்ற இராஜதந்திரம்’ என்கின்ற பாடவிதானத்தின் கீழ் சில பல்கலைக்கழகங்களில் தற்போது கற்பிக்கப்படுவதாக திருமதி தயான் ஜயதிலக எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2009ல் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற போது, பாதுகாப்பு சபையின் செயற்பாட்டிற்காக மேற்குலக நாடுகள் நியூயோர்க்கில் கூட முயற்சித்தன. ஆனால் ரஸ்யா, சீனா போன்ற வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட நாடுகள் இதற்கு அனுமதிக்கவில்லை.
இதன் பின்னர் மேற்குலக நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாகவும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கான சிறப்புக் கூட்டத்தொடர் ஒன்றை ஏற்பாடு செய்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையை மீட்டெடுப்பதற்கான முயற்சி மற்றும் சிறிலங்காவின் இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு பங்களிப்புச் செய்தல் போன்ற விடயங்கள் இச்சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டது.
இச்சிறப்பு விவாதத்தின் போது இந்தியா, சிறிலங்காவின் ஆதரவாக இருந்தது. பூகோள கால மீளாய்வு செயற்திட்டத்திற்கு அப்பால் குறித்த நாடொன்றின் பெயரிலும் குறித்த நாடொன்றின் மீது தீர்மானம் இயற்றுவது தொடர்பில் இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் மேற்குலக நாடுகளால் சிறிலங்காவிற்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த தீர்மானத்தை தோல்வியடையச் செய்வதற்கான மூலோபாயம் ஒன்றை கலாநிதி ஜயதிலக வகுத்துக்கொண்டார். தயான் ஜயதிலக தனது இடதுசாரி அரசியல் பின்னணியின் மூலம் குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றிலும் அரசியலிலும் இடம்பிடித்ததுடன் அணிசேரா நாடுகளைச் சேர்ந்த ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவை இவர் பெற்றுக்கொண்டார். இதன்மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 47 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்த ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்கக் கூட்டணியின் ஆதரவை ஜயதிலக பெற்றுக்கொண்டார்.
அந்தநேரத்தில் சிறிலங்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக இல்லாததால் இதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு ஜயதிலக கடும்பிரயத்தனத்தை மேற்கொண்டார். கொழும்பிலிருந்த வெளியுறவுச் செயலகம் இது தொடர்பில் அச்சமுற்றது.
ஏனெனில் சிறிலங்காவிற்கு ஆதரவு தருவதாகக் கூறிய பல நாடுகள் மேற்குலக சக்திகளால் விடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நிர்ப்பந்தங்களைத் தொடர்ந்து தமது ஆதரவைப் பின்வாங்கிக் கொண்டன. இதனால் இந்த நாடுகளுடன் இடைவிடாத பேச்சுக்களை நடத்தி சிறிலங்காவிற்கு ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு ஜயதிலக பல்வேறு நகர்வுகளை முன்னெடுத்தார்.
தயான் ஜயதிலகவின் அணுகுமுறை அசாதாரணமானது. இவர் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் பேச்சுக்களை நடத்தினார். இவர் சிறிலங்காவின் நலன்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிக்குத் தேவையான நல்ல விடயங்களைச் சேகரித்தும் மற்றவற்றை நிராகரித்தும் கொண்டார். ஊடக மாநாடுகளிலும் பங்கெடுத்தார்.
இவர் மேற்குலக
இராஜதந்திரிகளிடமும் வெளிப்படையாக சில கருத்துக்களைக் கேட்டுக்கொண்டார். எடுத்துக்காட்டாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் ‘அனைத்துலக சமூகத்திற்காக’ உரையாற்றுவதாகத் தெரிவித்த போது, அவர் ஆபிரிக்க-ஆசிய-இலத்தீன் அமெரிக்கக் கூட்டணியைப் பிரதிநிதித்து வப்படுத்துகிறாரா அல்லது ஆசியப் பிராந்தியத்தின் சக்தி வாய்ந்த நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா என தயான் ஜயதிலக வினவினார். ஜயதிலகவின் கேள்வியால் தடுமாறிய குறித்த உயர் அதிகாரி இறுதியாக தான் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
சக்தி வாய்ந்த மேற்குலக நாடொன்று சிறிலங்கா அனைத்துலக விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போது, இதனை ஜயதிலக உடனடியாக ஏற்றுக்கொண்டதுடன் நிபந்தனை ஒன்றையும் விதித்தார். அதாவது உலகில் யுத்தம் இடம்பெறும் பல்வேறு நாடுகளிலும் இதையொத்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நிபந்தனை இட்டார்.
1972ல் லண்டன்டெறியில் இடம்பெற்ற Bloody Sunday படுகொலை மற்றும் இந்தோ-சீனா மற்றும் அல்ஜீரியாவில் பிரான்சால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றன தொடர்பாகவும் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜயதிலக கோரிக்கை விடுத்தார்.
ஜயதிலக தனது அணுகுமுறையில் வெற்றி பெற்றார் எனவும் இவரது அணுகுமுறையானது உணர்ச்சி மிக்கதாகவோ அல்லது அரசியல் நோக்கம் மிக்கதாகவோ இருக்கவில்லை எனவும் ஆனால் இது ‘புலமைசார்ந்ததாக’ இருந்ததாக திருமதி ஜயதிலக எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமத்துவம், வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம் மற்றும் நடைமுறைவாதம் போன்ற உலகளாவிய கோட்பாடுகளுக்கு ஜயதிலக ஆதரவைத் தேடிக்கொண்டார். பொதுமக்களின் உயிர் தொடர்பாகக் கருத்திற்கொள்ளாத பயங்கரவாத அமைப்பொன்றுடன் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக நாடொன்றை சமமாகக் கருதமுடியாது என ஜயதிலக வாதிட்டார். உலகெங்கும் இடம்பெற்ற மற்றும் இடம்பெறும் பல்வேறு யுத்தங்கள் தொடர்பாக ஜயதிலக பெற்றுக்கொண்ட அறிவானது சிறிலங்கா தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகளை விவாதிப்பதற்கு இவருக்கு உதவியது.
நாடுகளின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டியதன் தேவை தொடர்பாகவும் ஆபத்திலிருக்கும் அதிகாரிகள் ‘பாதுகாப்பதற்கான உரிமை’ என்கின்ற கோட்பாட்டின் கீழ் வெளிநாட்டுத் தலையீடுகளின் மூலம் பாதுகாக்கப்படுவது தொடர்பாகவும் ஜயதிலக வாதிட்டார். அனைத்துலகச் சட்டங்கள் உன்னதமானவையும் புனிதமானவையும், ஆனால் நிறுவக ரீதியான கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கவில்லை (சாசனங்கள் தவிர)என மைக்கேல் சாவேஜ் தெரிவித்த கருத்தை ஜயதிலக குறிப்பிட்டிருந்தார். ஆகவே அனைத்துலக நெறிமுறைகளுக்கு ஆதரவாக இறையாண்மை நாடுகள் செயற்படும் போது ஏற்படும் வெற்றிடத்தை அனைத்துலகச் சட்டங்களால் நிரப்பீடு செய்யமுடியாது.
ஜயதிலக தனது இராஜதந்திர சாணாக்கியமானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளினதும் ஆசியாவின் பலம்பொருந்திய நாடுகளான இந்தியா, பாகிஸ்தன் மற்றும் சீனா போன்ற நாடுகளினதும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தக்கவைத்துக் கொண்டது. தமிழ்நாட்டின் அரசியல் அழுத்தத்தையும் பொருட்படுத்தாது இந்தியாவானது சிறிலங்காவிற்கு ஆதரவளித்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்றன காஷ்மீர் மற்றும் ஏனைய பிரச்சினைகளில் முரண்பாட்டைக் கொண்டிருந்த போதிலும் சிறிலங்கா மீதான தீர்மானத்தில் மட்டும் ஒற்றுமையாகச் செயற்பட்டிருந்தன. நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரி அணிசேரா நாடுகளின் ஆதரவை ஜயதிலக பெற்றுக்கொண்டார். உள்ளக நிலைத்தன்மையானது சட்ட ஒழுங்கைக் கடைப்பிடிப்பதற்கு மட்டுமன்றி, சமூக, அரசியல், பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களின் வெற்றிக்கும் முக்கியமானதாகும்.
2011ல் ஐ.நா பொதுச் சபையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையில் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதும் உறுதிப்படுத்துவதும் அடிப்படை அவசியமாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதையே ஜயதிலகவும் வலியுறுத்தியிருந்தார்.
‘சட்ட ஆட்சியைக் கடைப்பிடிப்பதென்பது அனைத்துலக விவகாரங்களிலும் நாடுகளிற்கிடையிலும் மிகவும் முக்கியமானதாகும். இராணுவப் படைகளைப் பயன்படுத்தி மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மக்கள் தமது சொந்தத் தலைவிதியைத் தாமே தெரிவு செய்ய வேண்டிய மற்றும் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற உரிமையைக் கொண்டுள்ளனர்’ என மன்மோகன் சிங் குறிப்பிட்டிருந்தார்.
வழிமூலம் – daily mirror
ஆங்கிலத்தில் – பி.கே.பாலச்சந்திரன்
மொழியாக்கம் – நித்தியபாரதி