முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக கடிதம் அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று உத்தரவிட்டார். இதற்கு தினகரன் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தகுதிநீக்கம் தொடர்பாக விளக்கம் அளித்து சபாநாயகர் தனபால் கூறியதாவது:-
சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதை வெளிக்காட்டுவதற்காக, தேர்ந்தெடுத்த முதலமைச்சருக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தனர். விளக்க அறிக்கையில் பொய்யான தகவலை கூறினர். புதுச்சேரியில் தங்கிவிட்டு நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறியிருந்தனர். கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும், கட்சியில் இருந்து விலகியதாக கருதப்படுவதால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜக்கையன் அளித்த விளக்கத்தை ஏற்று அவரை தகுதி நீக்கம் செய்யவில்லை. ஆட்சியை கவிழ்க்க தான் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதாக ஜக்கையன் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடர ஆதரவு அளிப்பதாகவும் கூறியதால் அவரது விளக்கம் ஏற்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.