கிராமத்தின் மத்தியில் இருக்கும் மயானத்தை அகற்றுமாறு கோரி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கலைமதி கிராமமக்கள் 300 பேரையும் யாழ். மேல் நீதிமன்றத்துக்கு வரவழைத்து அதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி இளஞ்செழியன்.
குறித்த வழக்கானது நேற்றுக் காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நீதிமன்றத்திற்கு வருமாறு கிராம அலுவலகர் ஊடாக நீதிபதி இளஞ்செழியன் அழைப்பு விடுத்தார்.
நீதிபதியின் இவ்வழைப்பை ஏற்ற மக்கள் நேற்று பிற்பகல் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கானது நேற்றுப் பிற்பகல் 1.00 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கலைமதி கிராமத்தின் கிந்துசிட்டி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும், அங்கு சடலங்களை எரியூட்டுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.
வழக்குத் தொடுநர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான தம்பையா, கலைமதி கிராமத்தின் கிந்துசிட்டி மைதானத்தை அண்மித்து நான்கு மயானங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
அவரது கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி இளஞ்செழியன், இதுவரைநாளும் அமைதியாகப் போராடிய மக்களைப் பாராட்டியதுடன், அரச அதிகாரிகளைத் தொடர்புகொண்டு மயானத்தை வேறிடத்திற்கு மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன் போராட்டத்தைக் கைவிடுமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, வடமாகாண முதலமைச்சர் இம்மக்களைச் சந்தித்து இந்த மயானம் தொடர்பான பிரச்சனையைக் கேட்டறிந்ததுடன், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதால் இதுபற்றி தான் உடனடியாக முடிவெடுக்கமுடியாதுள்ளது எனவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.