பலவந்தமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் அனைத்துலகப் பிரகடனம் மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பலவந்தமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் அனைத்துலகப் பிரகடனம் எதிர்வரும் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக இருந்தது எனவும் எனினும்அன்றைய நாள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஐதேக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், 20ஆவது திருத்தச் சட்ட வரைபு தொடர்பாகவும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லையெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் நியுயோர்க் பயணம் செய்வதற்கு முன்னர் கூட்டு எதிரணியினருடனான சந்திப்பில் ஈடுபட்டதாகவும், இதன்போது பலவந்தமாகக் காணாமலாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் அனைத்துலகப் பிரகடனம் தொடர்பாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என தமக்கு அவர் உறுதி அளித்ததாகவும், தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.