சிறுமியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரொருவரைக் குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, அவருக்கு, 17 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, நேற்று (20) தீர்ப்பளித்தார்.
அத்துடன், 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 1 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் செலுத்தத் தவறின் 4 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
2009ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதியன்று, கடைக்குச் சென்று கொண்டிருந்த 14 வயதுச் சிறுமியை கடத்தி, தனது வீட்டின் அறைக்குக் கொண்டு சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்று, மேற்குறிப்பிட்ட நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிந்தது.
தாயார், வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில், பாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமியே கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதுகாவலரிடமிருந்து சிறுமியைக் கடத்திய குற்றத்துக்காக, 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5,000 அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அபராதத்தைச் செலுத்தத் தவறின் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.