2020ஆம் ஆண்டில் தனிநபர் வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (20) தெரிவித்தார்.
பத்திரங்களின் ஆணைக்குழுக்களுக்கான சர்வதேச அமைப்பின் வளர்ச்சி மற்றும் வளர்ந்துவரும் சந்தைகளுக்கான செயற்குழு மாநாடு கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், “சர்வதேச சந்தைக்கு முகங்கொடுக்கும் வகையில் எமது பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம். சர்வதேச நாடுகள், நிறுவனங்களுடன் இணக்கப்பாட்டுடன் கூடிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு சர்வதேச வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளோம்.
2006 ஆம் ஆண்டுகளில் நாடு கடன் சுமையில் இருந்தது. நாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆட்சியை உருவாக்கி, நாடு எதிர்நோக்கியிருந்த சவால்களுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் சிந்தித்தோம். நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை இன்றியமையாததாகும். அதனூடாக நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் அதன் செயற்றிறன் குறித்து அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டோம்.
இலங்கை பொருளாதாரத்தில் 2018-2019 ஆம் ஆண்டுகள் மிக முக்கியமானவை என நான் கருதுகிறேன். நாம், தற்போது தேசிய கடன் முகாமைத்துவ மூலோபாயம் குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறோம். சர்வதேச சந்தையிலிருந்து எமது நாட்டுக்கு நிலையான வகையில் நிதியை பெற்றுக்கொள்ளும் மூலோபாயங்கள் கலந்துரையாடப்பட்டு வருகின்றன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதன் ஊடாக நாட்டுக்கு பெரும் முதலீடு கிடைத்துள்ளது. அதேபோன்று மத்தள விமான நிலையம் தொடர்பிலும் செயற்படுவதற்கு தயாராக இருக்கிறோம். அது தொடர்பிலான தீர்மானங்கள் எதிர்வரும் ஆண்டில் வெளியிடப்படும்.
இவ்வாறான திட்டங்கள் ஊடாக சில அடிப்படை முதலீடுகளை அவ்வந்த பகுதிகளில் நாம் அதிகரித்துக்கொள்ள முடியும். இரும்பு உற்பத்தி, இயற்கை எரிவாயு உற்பத்தி, சீமெந்து உற்பத்தி போன்ற முதலீடுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியங்கள் இதனால் ஏற்பட்டுள்ளன.
இலங்கையில் பொருளாதார நகரங்களை உருவாக்குவதற்காக நாம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உற்பத்தித்துறை, வணிகத்துறை, தொழில்நுட்பத்துறை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவே இவை அமையப்பெறவுள்ளன.
பொருளாதார ரீதியில் நாம் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இலங்கையில் முதலீடு செய்வதற்குரிய சாதகமான காரணிகள் ஏராளமாக இருக்கின்றன. நாட்டில் தற்போது உள்ள கடன்சுமையானது எமது சந்ததியுடன் நிறைவுக்கு வரவேண்டும் என்ற நோக்கிலேயே நாம் செயற்பட்டு வருகிறோம். மூலதனச் சந்தையை விரிவடையச் செய்வதன் ஊடாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.