ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான, தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வின் நிமித்தம், கடந்த 11 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், ஆற்றிய ஆரம்ப உரை, இலங்கையின் உள் விவகாரத்தில் நேரடியான தலையீடாக அமைந்திருந்தது” என்றும் சுட்டிக்காட்டினார்.
“சர்வதேச மட்டத்தில், இலங்கை அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபட்டு விட்டதாக ஜனாதிபதியும் பிரதமரும், அரசாங்கமும் தொடர்ந்தும் தெரிவித்து வந்துள்ளனர். எனினும், உயர்ஸ்தானிகரது இந்த அறிக்கையானது, இலங்கையின் உள் விவகாரத்தில் மீண்டும் நேரடியாக தலையீடு செய்வதாக அமைந்துள்ளது” என்றும் அவர் இதன்போது கூறினார்.
“இது பாரதூரமான பிரச்சினையாகும். இறையாண்மையுள்ள நாட்டை அச்சுறுத்த ஐ.நா. உயர்ஸ்தானிகர் முயற்சித்திருக்கிறார்” என்றும் குறிப்பிட்ட அவர், “இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதையும் இந்த விடயத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென்பதையும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், சபைக்கு அறிய தர வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.