தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் கடந்த 2 வாரத்தில் மட்டும் டெங்குவுக்கு 11 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதலில் கேரள மாநில எல்லையான கோவை பகுதிகளில் பரவிய டெங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதன்பின் குமரி, நெல்லை, சேலம், ஈரோடு, கடலூர் போன்ற மாவட்டங்களிலும் பரவியது. பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்த பிறகு டெங்குவின் தாக்கம் தீவிரம் ஆனது.
அதை தடுக்க பல்வேறு சுகாதார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் டெங்குவை கட்டுப்படுத்த முடியவில்லை. தினமும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
தற்போது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் டெங்குவுக்கு உயிரிழந்தனர்.
அம்பத்தூர் கல்யாணபுரத்தை சேர்ந்த சாம்ராஜ் மகள் 3 வயது ஜாய்பெனிட்டா, அம்பத்தூர் புதூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகள் திவ்யபாரதி (6) பரிதாபமாக இறந்தனர்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆந்திர சிறுமி சஞ்சனா (6) சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மதுரவாயல் வேல் நகரை சேர்ந்த ராஜூ என்பவரின் 1½ வயது மகள் ஸ்ரீதிவானி மர்ம காய்ச்சலுக்கு இறந்தான். சென்னையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 200 பேருக்கு டெங்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் 1500 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.
சென்னையில் கடந்த 2 வாரத்தில் மட்டும் டெங்குவுக்கு 11 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், மாணவ-மாணவிகள் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பலி தொடர்ந்து வருகிறது.
மன்னார்குடி அருகே உள்ள ராஜகோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் கிஷோருக்கு(3) திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவனை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். காய்ச்சல் குறையாததால் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். கிஷோரை பரிசோதித்த டாக்டர் அவன் இறந்துவிட்டதாக கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள மரவபட்டியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 25). கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதையடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்லில் டெங்கு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மரவனேரி கோட்டூர் காலனியைச் சேர்ந்தவர் ஜான்சிராணி. இவரது மகன் ஸ்ரீதர். 8-ம் வகுப்பு படித்து வந்தான். ஸ்ரீதருக்கு காய்ச்சல் இருந்ததால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி யூனியன் பூதமங்கலத்தை சேர்ந்த வீரய்யா, கூத்தம்மை ஆகியோர் டெங்குக்கு பலியானார்கள்.
புதுவை முதலியார் பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சரவணன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை மோசமானதை தொடர்ந்து புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சரவணன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிர் இழந்தார். இதனால் புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.
காய்ச்சல் ஏற்பட்டதும் அதை சாதாரணமாக நினைத்து கொண்டு சிகிச்சை பெறுகிறார்கள். அதன்பின் காய்ச்சல் தீவிரம் அடைந்ததும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை பொது மக்களிடம் இருப்பதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், தொடர் காய்ச்சல் இருந்தால் மருந்து கடைக்கு சென்று மாத்திரைகள் வாங்கி சாப்பிடாமல் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும், கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளை சுற்றி கிடக்கும் டயர், பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும் என்றனர்.