முன்பிருந்த அரசியலமைப்பு யாப்பை விட தற்போது வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தயாரித்த வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
இடைக்கால அறிக்கை தொடர்பில் நாட்டில் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருவதால் இடைக்கால அறிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அதிகாரப் பகிர்வு மற்றும் ஆட்சி முறை பற்றி இடைக்கால அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கை ஒற்றையாட்சி நாடாகக் காணப்படுகின்றது. இறையாண்மை பிளவு படாததும், பிரிக்கமுடியாததுமாகவே தெளிவாக வரையறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் தவறான கருத்துக்களை முற்றாக நிராகரிக்கின்றோம்.
சமஷ்டி ஆட்சி முறை பற்றி இடைக்கால அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. தற்போதைய அரசியலமைப்பில் இல்லாத ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் முன்மொழிவாக இலங்கை பிரிக்கப்படாததும் பிளவுபடாததுமான நாடாக உள்ளது.
மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்படும். அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டுமெனில் நாடாளுமன்றத்தில் மாத்திரமே கொண்டுவரப்படும். இறையாண்மை பிரிக்கமுடியாததாக இருக்கவேண்டும்.
சமஷ்டி ஆட்சிய முறையில் மாத்திரமே இறையாண்மை பிரிக்கமுடியும். மாகாணங்கள் பிரிந்து செல்வதைத் தடுக்க தற்போதைய அரசியலமைப்பில் தெளிவான சட்டத் திருத்தங்கள் இல்லை.
புதிய அரசியலமைப்பில் மாகாணங்களைப் பிளவுபடுத்தமுடியாதவாறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாணங்களில் கலவரங்கள், போராட்டங்கள், அசாதாரண நிலமை வரும்போது ஜனாதிபதியின் கீழ் மாகாணசபையைக் கொண்டுவரமுடியும். தேவையானால் மாகாணத்தைக் கலைக்கவும்முடியும்.
தற்போதைய அரசியலமைப்பைத் தாண்டி புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பௌத்தத்திற்கான முன்னுரிமையும் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மூலம் : thuliyam