தமிழரசுக் கட்சியினால் இன்று மன்னாரில் நடத்தப்பட்ட சமகால அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மக்கள் தமது கருத்துக்களைக் கூறுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லையென அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மக்கள் விசனம்தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் தமிழரசுக் கட்சியினால் சமகால அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
இக்கருத்தரங்குக்கு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் எனப் பெருமளவானோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இக்கருத்தரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம், ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்குக்கு வருகை தந்த அரசியல் வாதிகள், சமகால அரசியல் கள நிலவரம் தொடர்பாகவும், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.
சுமார் 4 மணித்தியாலங்களாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் ஒரு சில பொதுமக்களுக்கு மாத்திரமே கேள்வி கேட்கவும் கருத்தினைத் தெரிவிக்கவும் அனுமதிக்கப்பட்டது.
எனினும் பல மக்கள் கேள்விகளைக் கேட்கவும், தமது கருத்துக்களைத் தெரிவிக்க இருந்தபோதும் அதற்கான நேரம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்தரங்கில் கலந்துகொண்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.